சென்னை: அம்மா உணவகம் ஊழியர்களின் தினசரி சம்பளம் ரூ. 325 ஆக உயர்த்தி சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது ஏழை மக்களின் பசியை போக்கும் வகையில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்ட அம்மா உணவகம், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிதி சிக்கல் என கூறி உணவு பொருட்கள் விற்பனை குறைக்கப்பட்டது. மேலும் தரமும் குறைந்தது. இதனால் பொதுமக்கள் அம்மா உணவகங்களை நாடாத நிலையில், சில இடங்களில் அம்மா உணவகங்களை சென்னை மாநகராட்சி மூடியது.
இந்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு திமுக அரசு அம்மா உணவகங்களை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு, அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்பாக தற்போது அங்கு பணியாற்றி வரும் ஊழியர்களின் தினசரி சம்பளத்தில் ரூ.25 அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊதிய ஊயர்வு, 8 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நிறைவேற்றப்பட்டு உள்ளது
சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான தினக்கூலி ரூ.300-ல் இருந்து ரூ.325-ஆக உயர்த்தப்பட்ட ஊதியத்தை அனைத்து ஊழியர்களுக்கும் வழங்க சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 2013ஆம் ஆண்டு 127 அம்மா உணவகங்களாக தொடங்கப்பட்டது. தற்போது 392 அம்மா உணவகங்களாக அதிகரித்து செயல்பட்டு வருகிறது. அவற்றில் 3100 மகளிர் பணிபுரிகின்றனர்.
இவர்களுக்கு நாள் ஒன்றுக்க தினக்கூலியாக ரூ. 300 வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தினக்கூலியை உயர்த்தி தர கோரி சுமார் 8 ஆண்டுகளாக ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அண்மையில் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அம்மா உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், அம்மா உணவகத்தில் பணிபுரியும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு நாளொன்றுக்கு வழங்கப்பட்டு வரும் தினக்கூலியை ரூபாய் 300-இல் இருந்து 325 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
மேலும் ஏப்ரல், மே மாதத்திற்கான ஊதிய உயர்வை அரியர்ஸ் தொகையாக ஊழியர்களுக்கு விடுவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊதிய உயர்வு மூலம் ஆண்டுக்கு சென்னை மாநகராட்சிக்கு மூன்று கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.