கொல்கத்தா :
மே.வங்க மாநிலத்தை சேர்ந்த மிர்சா முண்டா என்பவர், பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து போராடிய பழங்குடியின போராளி ஆவார். நாட்டு விடுதலைக்காக 25 வயதிலேயே தனது உயிரை தியாகம் செய்தவர்.
மே. வங்க மாநில பழங்குடியின மக்கள் அவரை தெய்வமாக வழிபடுகிறார்கள்.
மே. வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலை யொட்டி இப்போதே பா.ஜ.க. அங்கு பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டது.
வியாழக்கிழமை அன்று மே.வங்காள மாநிலத்துக்கு சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமீத்ஷா அங்குள்ள பங்குரா பகுதியில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.
இந்த பகுதி பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் பகுதியாகும். அவர்கள் ஆதரவை பெறும் வகையில் அங்குள்ள மிர்சா முண்டா சிலைக்கு மாலை அணிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி அமீத்ஷாவும், சிலைக்கு மாலை அணிவித்தார்.
ஆனால் அமீத்ஷா மாலை அணிவித்தது முண்டா சிலைக்கு அல்ல. அது பழங்குடியின வகுப்பை சேர்ந்த வேட்டைக்காரர் ஒருவரின் சிலையாகும். தவறு தெரிய வந்ததும் பா.ஜ.க.வினர் பதறிப்போனார்கள்.
அவசரம் அவசரமாக மிர்சா முண்டாவின் புகைப்படம் எங்கிருந்தோ எடுத்து வரப்பட்டது. அந்த புகைப்படத்தை “வேட்டைக்காரர் சிலையின் கீழ் பகுதியில் வைத்து அமீத்ஷா, மலர் தூவ ஏற்பாடு செய்துள்ளனர். அவரும் மலர் தூவி விட்டு சென்றுள்ளார்.
போதாக்குறைக்கு அமீத்ஷா தனது, ட்விட்டரில் “பழங்குடியின தலைவர் முண்டா சிலைக்கு அஞ்சலி செலுத்தினேன்” என பதிவிட்டுள்ளார்.
இதனால் அங்குள்ள பழங்குடியின மக்கள் கொந்தளித்துள்ளனர். “யாரோ ஒருவர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, முண்டா சிலைக்கு மாலை அணிவித்ததாக சொல்லி அவரை அவமானம் செய்து விட்டார் அமீத்ஷா” என அவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்து விட்டது, பா.ஜ.க.வினர் செயல்.
– பா.பாரதி