கொல்கத்தா:
மேற்குவங்கத்தில் பேரணி நடத்தி, அமைதியை குலைக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா முயற்சி செய்வதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பி எல் புனியா குற்றம் சாட்டியுள்ளர்.
மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவுக்கு சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த விளக்க கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். பின்னர் அங்கு நடக்க உள்ள பேரணியிலும் அவர் பங்கேற்க உள்ளார். தொடர்ந்து ராஜா்ஹாட்டில் தேசிய பாதுகாப்புப் படையினருக்காக (என்எஸ்ஜி) கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டடத்தை அமித் ஷா திறந்து வைக்கிறாா்.
குடியுரிமை சட்டத்தை ஆதரித்து ஷாகித் மினாரில் நடக்க உள்ள பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பி எல் புனியா, குடியுரிமை சட்டத்தில் எந்த தவறும் இல்லை என்றால், எதற்காக இதுபோன்ற பேரணி நடத்த வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், இந்த பேரணி நடத்துவதன் மூலம் மேற்கு வங்கத்தில் நிலவி வரும் அமைதியை குலைக்க அமித்ஷா முயற்சிக்கிறார் என்றும் புனியா தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் போரட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சில மாநிலங்களில் இந்த சட்டத்திற்கு எதிரான தீர்மானங்கள் கொண்டு வரப்ப்ட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
அமித்ஷாவின் வருகை குறித்து பேசிய புனியா, அமித்ஷா பேரணியில் உரையாற்றுவது குறித்து எப்போது திட்டமிட்டப்படது? என்று கேள்வி எழுப்பினார்.
பாஜக தலைவர்களின் பேச்சுகளே டெல்லி வன்முறைக்கு வழி வகுத்தது என்று தெரிவித்த புனியா, டெல்லி வன்முறை மிகவும் வருந்ததக்கது என்றும் தெரிவித்தார்.
டெல்லி வன்முறை காரணமான பாஜக தலைவர்கள் மீது அரசு மற்றும் டெல்லி போலீஸ் வழக்கு பதிய வேண்டும் என்றும் புனியா வலியுறுத்தினார்.