அகர்தலா
அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் இலங்கையில் பாஜக அரசு அமைக்க அமித் ஷா திட்டமிட்டுள்ளதாக திரிபுரா முதல்வர் பிப்லாப் தேப் தெரிவித்துள்ளார்.
திரிபுரா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் முதல்வராக பிப்லாப் தேப் பதவி வகித்து வருகிறார். நேற்று முன் தினம் திரிபுராவில் உள்ள சதபர்ஷில்ட் பவனில் பாஜக கட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்வர் பிப்லாப் தேப் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பாஜகவின் தலைவர் அமித்ஷாவை வானளாவப் புகழ்ந்துள்ளார்.
பிப்லாப் தேப் தனது உரையில், “அமித்ஷாவின் தலைமையின் கீழ் பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது. உலகின் மிகப் பெரிய கட்சியாக வளர்ந்து வரும் பாஜக விரைவில் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி அமைக்கும். கேரளாவில் தற்போதுள்ள ஆட்சி விரைவில் முடிந்து பாஜக ஆட்சி மலரும். இதைப்போல் வரும் தேர்தலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மக்கள் பிரியாவிடை கொடுத்து அனுபி விடுவார்கள். தமிழகம் உள்பட நாடெங்கும் தாமரை மலரும்.
நாடு முழுவதும் பாஜக ஆட்சி மலர்ந்த பிறகு அமித் ஷா நமது அண்டை நாடுகளான இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் பாஜக அரசு அமைக்க திட்டமிட்டுள்ளார். வடகிழக்கு மண்டல பாஜக செயல்ர் அஜய் ஜாம்வாலுடன் உரையாடும் போது அவர் நாடெங்கும் பாஜக அரசு அமைக்க வேண்டும் என சொன்னபோது அமித்ஷா நேபாளம் மற்றும் இலங்கை தேர்தலிலும் பாஜக வென்று அரசு அமைக்கும் என தெரிவித்தார்” என கூறி உள்ளார்.
இது எதிர்க்கட்சிகள் இடையே கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மார்க்சிஸ்ட் தலைவர் ஜிதேந்திர சௌத்ரி ஒரு மாநில முதல்வருக்கு அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகம் குறித்து எதுவும் தெரியாமல் உள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தேப் சொன்னபடி அமித்ஷா கூறி இருந்தால் அது அண்டை நாடுகளின் விவகாரங்களில் இந்தியா தேவை இல்லாமல் தலையிடுவதாக பொருள் எனவும் கூறி உள்ளார்.
திரிபுரா மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் தபஸ் டே, “அமித்ஷாவின் அறிவிப்பு ஏகாதிபத்ய மனப்பான்மையுடன் உள்ளது. இந்தியா இதற்கு எதிராக பல வருடங்களாக போராடி வருகையில் அமித்ஷா இவ்வாறு அறிவித்துள்ளார். இந்தியாவால் நேபாளம் மற்றும் இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் நிச்சயம் தலையிட முடியாது” என கூறி உள்ளார்.