லக்னோ:
உபி சட்டமன்ற தேர்தல் பாஜ தலைவர் அமித்ஷாவுக்கு மிகவும் கடினமான தேர்தல் களமாக அமைந்துள்ளது. 73 இடங்களை பிடித்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை விட அதிகளவில் அவரது பங்களிப்பு இப்போது தேவைப்படுகிறது.
மோடியின் புகழுக்கு எவ்வித கலங்கமும் ஏற்படவில்லை என்றாலும் பணமதிப்பிழப்பு என்ற பேரிடரை அவர் ஏற்படுத்தியுள்ளார். அமித்ஷாவுக்கு வாக்குகளை ஈர்க்கும் சக்தி இல்லை. இது பீகாரிலும், டெல்லியிலும் நிரூபனமாகியுள்ளது.
தற்போது சமாஜ்வாடியின் முதல்வர் வேட்பாளர் அகிலேஷ் யாதவுடன் காங்கிரஸ் கைகோர்த்துள்ளது. மற்றொரு பக்கம் 4 முறை முதல்வராக இருந்த மாயாவதி எதிர்த்து நிற்கிறார். இந்நிலையில பாஜவுக்கு ஒரு முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வதிலேயே அமித்ஷா தற்போது தோற்றுவிட்டார்.
உபி.யில் வேட்பாளர்கள் தேர்வு, பிரச்சாரம் முதல் அனைத்து பொறுப்புகளையும் மோடியும், அமித்ஷாவுமே கையாண்டு வருகின்றனர். இதர தலைவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. பாஜவில் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி வேட்பாளர் தேர்வு அமித்ஷாவிடம் வழங்கப்பட்டது. தற்போது கட்சியின் விசுவாசிகளுக்கு சீட் வழங்காமல் புறக்கணித்து விட்டு வேறு கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.
இதன் வெளிப்பாடாக தான் ஆதித்யாநாத்தின் இந்து யுவ வாகினி அமைப்பு பாஜவை எதிர்த்து 64 வேட்பாளர்களை களம் இறக்குகிறது. உபி.யில் பாஜவை தோல்வி அடைய செய்து 2019ம் ஆண்டில் நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மோடியை மிகப் பெரிய போட்டியாக உருவாவதை தடுக்க எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளது.
இதற்காக பழைய பகையை எதிர்கட்சிகள் மறந்து வேட்பாளர் தேர்விலும், பிரச்சாரத்திலும் சில அனுசரிப்புகளும், ஒத்துழைப்பும் நடந்து வருகிறது. மாயாவதி, அகிலேஷ், ராகுல் ஆகியோர் மோடியின் வாக்குறுதிகள் போலியானது என்று பிரச்சாரம் செய்கின்றனர்.
ராஜ்நாத் சிங் மகன் பங்கஜ் சிங், கல்யாண் சிங் பேரன், ஹூக்கும் சிங் மகள் ஆகியோருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்தது கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி ஆர்எஸ்எஸ்.ஸூக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதோட ஜாட் அமைப்பின் ஒட்டுமொத்த எதிர்ப்பை பாஜ சம்பாதித்து வைத்துள்ளது. பணமதிப்பிழப்பு, விவசாய பொருட்களுக்கு விலை நிர்ணயம் போன்வற்றில் ஜாட் சமூத்தினர் அதிருப்தியில் உள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாக பாஜவுக்கு எதிராக உள்ள 19 சதவீத முஸ்லிம் மற்றும் தலித் வாக்குகளை பிரித்துக் கொள்ளும் வகையில் அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன. ஒரு முஸ்லிம் வேட்பாளரை கூட பாஜ நிறுத்த வில்லை. ஆனால் மாயாவதி 99 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். சமாஜ்வாடி காங்கிரஸ் கூட்டணியும் இதேபோன்ற நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
அதனால் அமித்ஷா பழைய முறையிலேயே இந்த முறை உபி.யில் அரசியல் செய்ய நினைத்தால் அது அவருக்கும், மோடிக்கும் ஏமாற்றமாக தான் அமையும் என்ற நிலை உள்ளது.