மஹாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா கூட்டணி ஆட்சியே அமையும் என அமித்ஷா தெரிவித்ததாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக – சிவசேனா கூட்டணி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியது. ஆனால் முதல்வர் பதவியை சுழற்சி முறையில் இரண்டரை ஆண்டுகள் விட்டு கொடுத்தால் தான், ஆட்சியமைக்க ஆதரவு கொடுப்போம் என சிவசேனா தெரிவித்ததால், அக்கோரிக்கையை ஏற்க பாஜக மறுத்துவிட்டது. இருந்தபோதும், அதிக இடங்களை பெற்ற கட்சியாக இருப்பதால் ஆட்சியமைக்க ஆளுநர் பாஜகவை அழைக்க, தாங்கள் ஆட்சியமைக்க விரும்பவில்லை என்று அக்கட்சி தெரிவித்துவிட்டது.
இதனையடுத்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை ஆட்சி அமைக்க ஆளுநர் அடுத்தடுத்து அழைத்தார். இரு கட்சிகளும் கூடுதல் அவகாசம் கேட்ட நிலையில், யாருக்கும் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை செய்தார். அதனை ஏற்று, அங்கு குடியரசு தலைவர் ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மஹாராஷ்டிரா நிலவரம் குறித்து அமித்ஷாவிடம் தான் பேசியதாகவும், அதற்கு பாஜக தான் ஆட்சியமைக்கும் என அவர் உத்திரவாதம் அளித்ததாகவும் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதற்கான மத்தியஸ்த பணியில் நீங்கள் ஈடுபட்டால் ஒரு வழி கிடைக்கும் என அமித் பாயிடம் தெரிவித்தேன். அதற்கு அவர் கவலைப்பட வேண்டாம், எல்லாம் நன்றாகவே சென்றுக்கொண்டிருக்கிறது என்றும், பாஜக – சிவசேனா கூட்டணி அரசு தான் அங்கு அமையும் என்றும் உறுதியாக தெரிவித்தார்” என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பாஜக உடனான கூட்டணியை சிவசேனா முறித்துக்கொள்ள வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் வைத்த கோரிக்கையை ஏற்று மத்திய அமைச்சர் பதவியை அக்கட்சி உதறியுள்ள நிலையில், தொடர்ந்து மாநில உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டணி தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இச்சமயத்தில் ராம்தாஸ் அத்வாலே இதுபோல பேசியிருப்பது, அம்மாநில அரசியலில் மேலும் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.