டில்லி

நாட்டில் 5 லட்சம் கோடி பொருளாதார முன்னேற்றம் அடைய உள்நாட்டு பாதுகாப்பு அவசியம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி இந்தியாவில் 5 லட்சம் கோடி பொருளாதாரம் அமைக்க வேண்டும் என அடிக்கடி கூறி வருகிறார். இது குறித்துப் பல பொருளாதார நிபுணர்கள் புள்ளி விவரங்களுடன் கருத்து தெரிவித்துள்ளனர். பாஜக தலைவர்கள் பலரும் மோடியின் இந்த விருப்பம் குறித்துத் தொடர்ந்து பேசி வருகின்றனர். நேற்று டில்லியில் காவல்துறை சீரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் 49 ஆம் ஆண்டு துவக்க தின விழா  கொண்டாடப்பட்டது. இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

அமித்ஷா தனது உரையில்,”பிரதமர் மோடி நாட்டில் 5 லட்சம் கோடி பொருளாதாரத்தை அமைக்க விருப்பம் தெரிவித்து வருகிறார். அதை அடைய உள்நாட்டு பாதுகாப்பு  மிகவும் அவசியமானதாகும். நாட்டின் உட்பாதுகாப்பு மற்றும் வெளிப்பாதுகாப்பை பலப்படுத்துவது மிகவும் தேவையாக உள்ளது. உள்நாட்டுப் பாதுகாப்புக்காக சுமார் 34000க்கும் அதிகமான காவல்துறையினர் மரணம் அடைந்துள்ளனர். காவலர்களுக்கு பணியில் ஏராளமான சவால்கள் உள்ளன.

இந்த சவால்களைச் சந்திக்க காவல்துறையில் சீரமைப்புப் பணிகள் தேவையானதாகும். ஆனால் இந்த சீரமைப்பு பணி மிகவும் பெரிய பணி என்பதால் இதை காவல்துறை சீரமைப்பு மற்றும் மேம்பாட்டு பிரிவ புதியதாக வடிவமைக்க வேண்டிய நிலையில்  உள்ளது. இதற்காக நாடெங்கும் ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைகளை யார் வேண்டுமானாலும் உள்துறை அமைச்சகத்துக்கு அளிக்கலாம். அந்த ஆலோசனைகளில் தேவையானவற்றைச் செயல்படுத்தி காவல்துறையை முன்னேற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார்.