சென்னை: அதிமுக சார்பில் இன்று காலை எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் அந்த கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியானது. பின்னர் சிறிது நேரத்தில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. குளறுபடிக்கு இடையே இன்று மதிய வேளையில் கூட்டம் தொடங்கியது. இதை அதிமுக சமூகவலைதளமும் உறுதி செய்துள்ளது.
அதிமுகவில் சசிகலா குழப்பத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று காலை கூட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென ரத்து செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகின. இதனால், அங்கு வந்திருந்த கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் குழப்பம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து, மீண்டும் மதியம் 12 மணிக்கு மேல் கூட்டம் தொடங்குவதாக தகவல் வெளியானது. அதைத்தொடர்ந்து, அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் தலைமையில் தலைமைக் கழகத்தில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல், அதிமுக உட்கட்சி தேர்தல் நடத்துவது, சசிகலா விவகாரம் உள்ளிட்ட பல முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ஆலோசனை கூட்டம், பின்னர் ரத்து, மீண்டும் கூட்டம் என்று அடுத்தடுத்து குளறுபடிகள் ஏற்பட்டது, அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.