டில்லி
எதிர்க்கட்சிகளின் அமளிகளுக்கு இடையில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் 3 மசோதாக்களை நிறைவேற்றி உள்ளது.
இஸ்ரேலின் பெகாசஸ் மென்பொருளைக் கொண்டு எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலரின் அலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்த பாஜக அரசு மறுத்து வருகிறது. எனவே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு அவைகள் ஒத்தி வைக்கப்படுகின்றன.
இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவை கூடியதும், கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் சபையின் மையப்பகுதிக்குச் சென்று பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். சபாநாயகர் ஓம் பிர்லா0 அவர்களை இருக்கைக்குத் திரும்புமாறு சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக்கொண்டும் அவர்கள் தொடர்ந்து அங்கேயே இருந்து அமளியில் ஈடுபட்டனர்.
அமளிகளுக்கு இடையே சுமார் 40 நிமிடங்கள் கேள்வி நேரம் நடைபெற்றது. பின்னர் அவையை பகல் 12 மணிவரை சபாநாயகர் ஒத்தி வைத்தார். பகல் 12 மணிக்கு அவை கூடியபோதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் கோஷம் எழுப்பியதால் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பகல் 2 மணிக்கு மீண்டும் அவை கூடியபோது அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகள் மசோதா அமளிக்கிடையே நிறைவேற்றப்பட்டது. நாடு முழுவதும் உள்ள 41 ஆயுத தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்வதற்குத் தடை விதிக்க மத்திய அரசுக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது. அதன் பின்னர், மாலை 4 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் அவை கூடியபோது, தீர்ப்பாய சீர்திருத்தங்கள் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. பிறகு நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
நேற்று காலை மாநிலங்களவை கூடியதும், பெகாசஸ் உளவு பிரச்சினையை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அந்த அமளிக்கிடையே கேள்வி நேரம் சிறிது நேரம் நடத்தப்பட்டு பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோது, கேள்வி நேரம் தொடர்ந்த போதும் எதிர்க்கட்சிகளின் அமளி தொடர்ந்தது. ஆகவே அவைபிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பகல் 2 மணிக்கு அவை கூடியபோது, பாஜக உறுப்பினர் புவனேஷ்வர் கலிதா, சபையை நடத்தினார். அவர், திவால் சட்டத் திருத்த மசோதாவை விவாதத்துக்கு முன்வைக்குமாறு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு அழைப்பு விடுத்தார். ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்துக்கு மாற்றாக, இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்குச் சென்று அமளியில் ஈடுபட்டனர்.
இதன் நடுவே, மசோதா மீது விவாதம் தொடங்கியது. பிஜு ஜனதாதள எம்.பி. அமர் பட்நாயக், முதலில் பேசினார். அதன் பின்னர், அதிமுக எம்.பி. தம்பிதுரை உள்ளிட்ட உறுப்பினர்கள் விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பிறகு. இறுதியில், குரல் வாக்கெடுப்பு மூலம் திவால் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.