இஸ்ரேல் – பாலஸ்தீன் இடையிலான போர் நான்காவது நாளாக நீடித்துவரும் நிலையில் இஸ்ரேல் பகுதியில் 900 பேரும் காசா பகுதியில் 680 பேர் என 1500க்கும் மேற்பட்டோர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.

காசா பகுதிக்கு மின்சாரம், உணவு மற்றும் எரிபொருள் தடை செய்யப்பட்டுள்ளதை அடுத்து சண்டை நடைபெறும் பகுதிகளில் உள்ள நிலவரம் குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் தெரியவில்லை.

இந்த நிலையில் இஸ்ரேல் நாட்டில் வசிக்கும் அர்ஜென்டினா, பிரான்ஸ், பிலிப்பைன்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, கனடா, பிரேசில், சிலி, இத்தாலி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஏராளமான வெளிநாட்டினரைக் காணவில்லை என்றும் பலரை ஹமாஸ் படையினர் பிடித்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், தாய்லாந்தைச் சேர்ந்த 18 பேர், அமெரிக்காவைச் சேர்ந்த 11 பேர், நேபாளைச் சேர்ந்த 10 பேர் உட்பட மொத்தம் 57 வெளிநாட்டினர் இந்த போரில் கொல்லப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமா கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரே ஒரு இந்தியர் மட்டும் காயங்களுடன் உயிர் தப்பினார்.

அதேவேளையில் அமெரிக்கர்களை மீட்கும் முயற்சியில் அந்நாட்டு அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. தவிர, ஹமாஸ் குழுவிடம் சிக்கியுள்ள ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர்களை விடுவிக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.

காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக பல்வேறு நாடுகள் குரல்கொடுத்துள்ளன. இதனையடுத்து இந்த பகுதியில் விழும் ஒவ்வொரு குண்டுக்கும் ஒரு வெளிநாட்டு பிணைக்கைதி பலியாக நேரிடும் என்று ஹமாஸ் படையினர் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து கவலை தெரிவித்துள்ள ஐநா போரை நிறுத்தக்கோரி இருதரப்பினரையும் வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் பாலஸ்தீன பகுதிக்குள் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களை இஸ்ரேல் நேற்றிரவு குண்டுவீசி தாக்கியுள்ளது இதனையடுத்து காசா எல்லை மீண்டும் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.