உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார மற்றும் வர்த்தக தடைகளை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ளன.
தவிர ரஷ்ய விமானங்கள் தங்கள் நாட்டின் மீது பறக்க கூடாது என்று பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன.
இதனைத் தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பேசிய அதிபர் ஜோ பைடன் “நட்புநாடுகளுடன் சேர்ந்து ரஷ்ய விமானங்களுக்கு தடை விதிப்பது ரஷ்யாவின் பொருளாதாரத்தை சக்கையாக பிழிய உதவும்” என்று கூறியதோடு அமெரிக்கவுக்குள் ரஷ்ய நாட்டு விமானங்கள் நுழைய தடை விதிப்பதாக அறிவித்தார்.
அல்பேனியா, அங்குவிலா, ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, பிரிட்டன், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், ஜெர்மனி, ஜிப்ரால்டர், ஹங்கேரி, கிரீஸ், டென்மார்க், கனடா, குரோஷியா, சைப்ரஸ், செக் குடியரசு, எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்சி, அயர்லாந்து, ஐஸ்லாந்து, இத்தாலி, லாட்வியா , லக்சம்பர்க், மால்டா, நெதர்லாந்து, நார்வே, போலந்து, போர்ச்சுகல், ருமேனியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, ஸ்பெயின் மற்றும் ஸ்வீடன் ஆகிய 36 நாடுகள் ஏற்கனவே ரஷ்ய விமானத்திற்கு தடை விதித்துள்ளன.
தற்போது அமெரிக்காவும் தடை விதித்துள்ள நிலையில் இது ரஷ்யா உடனான வர்த்தகத்தில் மேலும் பாதிப்பை உண்டாக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.