“இந்தியா – பாக் இடையே சமாபாதனம் ஏற்பட அமெரிக்கா முயலும்” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளது பல்வேறு தரப்பில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் இந்த புதிய நிலைப்பாடு குறிப்பாக காஷ்மீர் விவகாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள முக்கிய பிரச்சினை காஷ்மீர் விவகாரம் ஆகும். காஷ்மீரின் பகுதிகள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இரு கூறுகளாக இருக்கிறது. பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீரை “ஆஸாத் (சுதந்திர) காஷ்மீர்” என பாகிஸ்தான் சொல்கிறது. அங்கு தேர்தல் நடத்தப்பட்டு “பிரதமர்” என்ற பொறுப்பிலும் ஒருவர் இருக்கிறார்.
இந்தியாவைப் பொறுத்தவரை, அந்த காஷ்மீரை “(பாகிஸ்தானால்) ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர்” என்றே சொல்லப்படுகிறது.
இதே போல தனது வசம் உள்ள காஷ்மீர் புதியை, தனது மாநிலம் என்கிறது இந்தியா. ஆனால் இந்த பகுதியை “(இந்தியாவால்) ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர்” என்கிறது பாகிஸ்தான்.
அதே நேரம், சீனா உட்பட பெரும்பாலான நாடுகள், தங்கள் நாட்டு வரைபடத்தில் காஷ்மீர் பகுதியை சர்ச்சைக்குரிய பிரதேசம் என குறிப்பிடுகின்றன.
இந்த காஷ்மீர் பகுதியில்தான் பாக் தாக்குதல் நடக்கிறது.. பாக் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் தாக்குதலும் நடக்கிறது. கார்கில் போர் உட்பட பல போர்களும் (வெளி உலகத்துக்கு தெரிந்தும் தெரியாமலும்) நடக்கின்றன.
இந்த நிலையில், இந்தியா பாக் இடையே சமாதானம் நிலவ அமெரிக்கா முயற்சி எடுக்கும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளது பல்வேறு மட்டங்களில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.
ஏனென்றால், காஷ்மீர் உள்ளிட்ட இந்தியா தொடர்பான விசயங்களில் அமெரிக்கா தலையிட வேண்டும் என்பதே எப்போதும் பாகிஸ்தான் நிலைபாடு. காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா.வில் எழுப்பவும் அவ்வப்போது பாகிஸ்தான் முயன்று கொண்டே இருக்கும்.
“ஜம்மு – காஷ்மீர் மாநிலம், இந்தியாவின் பிரிக்க முடியாத ஒரு பகுதி” என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது மேலும், காஷ்மீர் உள்ளிட்ட பாக் உடனான எந்த விவகாரத்திலும் மூன்றாவது நாட்டின் தலையீட்டை இந்தியா விரும்பியதில்லை. ஐ.நா.வில் இ்வ்விவகாரம் கிளப்பப்படுவதையும் இந்தியா எதிர்த்து வந்திருக்கிறது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், “இந்தியா பாகிஸ்தான் இடையே சமாதானம் நிலவ அமெரிக்கா முயலும்” என்று அறிவித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தியாவை ஆளும் பாஜக கட்சியினர், கம்யூனிஸ்ட் நாடு என்பதால் முந்தைய சோவியத் யூனியன் மற்றும் சீனாவை கடுமையாக எதிர்ப்பார்கள். இந்த இரு நாடுகளின் எதிர் நாடு என்பதால் அமெரிக்கா மீது ஓரளவு “நல்லெண்ணம்” கொண்டவர்களாக இருந்தார்கள்.
ஆனால், . டிரம்ப் அதிபரானவுடன், அதே பாஜகவினர் கொண்டாடினார்கள். காரணம், இனவாத மற்றும் மதவாத மனிதராக டிரம்ப் பார்க்கப்பட்டதும், இஸ்லாமியர்களுக்கு எதிராக அவர் தெரிவித்த கருத்துக்களும்தான்.
ஆகவே அதிபர் டிரம்ப் எந்தவித கேள்வியும் இன்றி பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்குவார்.. இந்தியாவுக்கு சாதகமாக நடந்துகொள்வார் என்பதே பாஜகவினரின் எண்ணமாக இருந்தது.
ஆனால் தற்போது “இரு நாடுகளுக்கிடையே சமாதானம் ஏற்பட முயல்வோம்” என்று டிரம்ப் சொன்னதில் இருந்து, இரு நாடுகளையும் சரிசமமாகவே டிரம்ப் நினைக்கிறார் என்பது உறுதியாகி உள்ளது.
இது பாஜகவினருக்கு பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.
தவிர, வழக்கம்போல “இந்தியா பாக் இடையேயான விவகாரங்களில் மூன்றாவது நாட்டின் தலையீடு தேவையி்ல்லை” என்று இந்திய (மத்திய) அரசு தெரிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.