ண்டன்

ண்டனில் உள்ள அம்பேத்கர் இல்லம் என்னும் 30 லட்சம் பவுண்ட் மதிப்புள்ள இந்தியாவின்  சொத்து இரு லண்டன் வாசிகளிடம் வழக்கில் சிக்கி தவித்து வருகிறது.

லண்டன் நகரில் உள்ள பிரிம்ரோஸ் ஹில் என்பது செல்வந்தர்கள் வாழும் பகுதி  ஆகும்.  இங்கு பிரபல மாடல் கேட் மாஸ் முதல் நடிகர் டேனியல் கிரெய்க் வரை பல செல்வந்தர்களின் இல்லங்கள் அமைந்துள்ளன.    இந்த இடத்தில் இந்தியாவுக்குச் சொந்தமான ஒரு இல்லம் அமைந்துள்ளதும் அங்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல நூற்றுக்கணக்கான இந்தியர்கள் வருகை தந்துள்ளதும் பலர்க்கும் வியப்பை உண்டாக்கும்.

அந்த வீடு பீம்ராவ் ராம்ஜி எனப்படும் சட்டமேதை அம்பேத்கர் வசித்த இடமாகும்.  அந்த இல்ல  வாசலில் டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர், இந்தியாவின் சமூகநீதி போராளி இங்கு 1921-22 வரை வசித்தார் என ஒரு அறிவிப்பு உள்ளது.  அறிவிப்பைத் தாண்டி மேலே சென்றால் அங்கு மாலை அணிந்த ஒரு மார்பளவு அம்பேத்கர் சிலை உள்ளது.

அத்துடன் அந்த மாளிகையில் அம்பேத்கர் வசித்த அறைகள் அவர் நினைவாக புதுப்பிக்கப்பட்டு ஒரு  அருங்காட்சியகமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.  அவர் உணவு உண்ட மேஜை, அவர் படித்த புத்தகங்கள், மற்றும் அவர் பயன்படுத்திய மூக்குக்கண்ணாடி ஆகியவை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.    ஆனால் இந்த அருங்காட்சியகம் எத்தனை நாட்கள் இயங்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

அம்பேத்கர் இல்லம் என்னும் பெயர் கொண்ட இந்த வீட்டைக் கடந்த 2015 ஆம் வருடம் மகாராஷ்டிர மாநில அரசு 30 லட்சம் பவுண்ட் விலை கொடுத்து வாங்கியது.  அதே வருடம் இந்த இல்லம் ஒரு அருங்காட்சியகமாக  மாற்றப்பட்டு பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது.   அதன் பிறகு இங்குப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்

இந்த கட்டிடம் குறித்து அருகிலிருந்த இரு லண்டன் வாசிகள் புகார் அளித்தனர்.  அதன்படி இந்த  கட்டிடம் அனுமதி இன்றி புதுப்பிக்க பட்டதாகவும் இங்கு அருங்காட்சியகம் நடத்த அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.  அதையொட்டி 2018 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் மகாராஷ்டிர அரசு இங்கு அருங்காட்சியகம் நடத்த அனுமதி கோரியது/   ஆனால் அந்த கோரிக்கை அக்டோபர் 2018 ஆம் வருடம் நிராகரிக்கப்பட்டது.

இதையொட்டி மகாராஷ்டிர அரசு அளித்துள்ள மேல் முறையிட்டு மனு வரும் செப்டம்பர் மாதம் 2 அன்று விசாரிக்கப்பட உள்ளது. அதே நேரத்தில் அருகில் வசிக்கும் இரு லண்டன் வாசிகளும் இங்கு அருங்காட்சியகம் இருப்பதால் ஏராளமான வாகனங்கள் வந்து போவதாகவும் வருகை தருவோர் மிகவும் சத்தமிடுவதாகவும் புகார் அளித்துள்ளனர்.

இதற்கான தீர்ப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   அந்த தீர்ப்புக்குப் பிறகு இந்த  அருங்காட்சியகம் இயங்குவது கடினம் எனக் கூறப்படுகிறது