டெல்லி: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள அமேசான், நெட்பிலிக்ஸ் ஓடிடி தளங்களில் ஆபாசமான மற்றும் அருவருக்கத்தக்க காட்சிகள் இடம்பெறுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, அந்த தளங்களில் வெளியாகும் சீரியல்களுக்கு சென்சார் அவசியம் என உச்சநீதி மன்றம் கருத்து தெரிவித்து உள்ளது.
மக்களிடையே இணையதளங்களில் நேரடியாக வெளியாகும் படங்கள், தொடர்கள் பார்ப்பதில் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, பல திரைப்படங்கள், தொடர்கள் போன்றவை இணையதளங்களிலேயே நேரடியாக வெளியாகி வருகிறது. இதற்கான கட்டணங்களும் குறைவு என்பதால், ஓடிடி தளங்களுக்கு நகர்ப்புற மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது.
இதற்கிடையில், ஓடிடி தளங்களில் வெளியாகும் தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் அபாசம் மற்றும் வன்முறை காட்சிகள், மக்களிடையே மோதலை தூண்டும் காட்சிகள் இடம்பெறுவதாக புகார்கள் எழுந்தது.
சமீபத்தில் அமேசான் ஒடிடி தளத்தில் வெளியான தாண்டவ் தொடர், இந்துக் கடவுள்களையும் அரசியல் அதிகாரத்தையும் கிண்டல் செய்யும் விதிமாக எடுக்கப்பட்டதாக எதிர்ப்பு எழுந்தது. இது தொடர்பான விசாரணையில் கைது செய்யப்படலாம் என்பதால் அமேசான் நிறுவன வர்த்தக பிரிவு தலைவர் அபர்ணா புரோகித் பகிரங்கமாக நாட்டு மக்களிடையே மன்னிப்பும் கோரினார்.
தொடர்ந்து, அவர் சார்பில் உச்சநீதி மன்றத்தில் முன் ஜாமின் கோரி முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணை நீதிபதிகள் அசோக் பூஷன், ஆர். சுபாஷ் ரெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது கருத்து தெரிவித்த நீதிபதி அசோக் பூஷன், மக்களிடையே ‘பராம்பரிய முறைப்படி சினிமாக்களை பார்க்கும் பழக்கம் குறைந்து வருகிறது. அமேசான் போன்ற தளங்கள் வழியாக சினிமாக்கள், இணைய தொடர்கள் பார்க்கப்படுகின்றன. இவற்றுக்கு தணிக்கை இருக்க வேண்டியது அவசியமில்லையா? என்று கேள்வி எழுப்பியவர், தணிக்கை அவசியம் என்றே நாங்கள் உணர்கிறோம். ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள சினிமாக்களில் ஆபாச காட்சிகள் இடம் பெறுகின்றன,’ என்றார்.
அப்போது, அமேசான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோகத்கி கூறுகையில், இது ஆபாச காட்சிகள் பற்றியது அல்ல, கருத்து சுதந்திரம் பற்றியது என குறிப்பிட்டார். மேலும், இதற்கு , அமேசான் நிறுவனமோ, அதன் ஊழியரோ குற்றவாளி அல்ல. விளம்பரம் தேடும் சிலர் இந்த வழக்கை தொடுத்துள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.
அதற்கு பதில் கூறிய நீதிபதிகள், கருத்து சுதந்திரம், ஆபாச காட்சிகளுக்கு இடையே சமநிலை பேணப்பட வேண்டும் என்றவர், ஆபாசங்களை தடுக்க சென்சார் செய்யப்பட வேண்டியதும் அவசியம், ஒடிடி தளங்களைக் கட்டுப்படுத்த மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்துள்ள விதிமுறைகளின் அடிப்படையில் இந்த வழக்கை விசாரிக்க இருப்பதாக கூறினர்.
புதிய விதிமுறைகளை நீதிமன்றத்தில் சமர்பிக்க அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை மார்ச் 5ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.