காஷ்மீர்: ஆண்டுதோறும் நடைபெறும் பனி லிங்க தரிசன அமர்நாத் யாத்திரை, இந்தாண்டு ஜுன் 23ம் தேதி துவங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை ஜம்மு – காஷ்மீர் ஆளுநர் மாளிகை அலுவலகம் வெளியிட்டுள்ளது.

ஜம்மு – காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில், இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக நாடு முழுவதுமிருந்தும், ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வது வாடிக்கை.

கடந்த 2019ம் ஆண்டு, அமர்நாத் யாத்திரையின்போதுதான், ஜம்மு – காஷ்மீர் சிறப்பு அதிகாரம் ரத்து உள்ளிட்ட முக்கிய அரசியல் நிகழ்வுகள் நடந்தேறி, அதனால் பக்தர்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

இந்நிலையில், ஜம்மு – காஷ்மீர் ஆளுநர் கிரீஷ் சந்திர முர்மு தலைமையில் நடந்த கூட்டத்தின் முடிவில், இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூன் 23ம் தேதி முதல் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது. மொத்தம் 42 நாட்கள் நடைபெறும் அமர்நாத் யாத்திரை, ஆகஸ்ட் 3ம் தேதியுடன் நிறைவடையும் எனவும் கூறப்பட்டுள்ளது.