ஜம்மு
ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பனிமலைகள் சூழ்ந்த காஷ்மீர் அமர்நாத் குகைக்கோவிலில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க கடும் சிரமத்துக்கு மத்தியில் பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். நடப்பாண்டு அமர்நாத் யாத்திரை கடந்த 2-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 9-ந் தேதி வரை 38 நாட்கள் யாத்திரை நடைபெற உள்ளது.
பக்தர்கள் பால்டால் பாதை, பஹல்காம் பாதை வழியாக அமர்நாத் யாத்திரை செல்கின்றனர். 3 ஆயிரத்து 880 மீட்டர் உயரத்தில் உள்ள பனிலிங்கத்தை இதுவரை 2½ லட்சம் பக்தர்கள் தரிசித்து உள்ளனர். கடந்த 2 தினங்களாக காஷ்மீரின் சில பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பால்டால் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு பெண் பக்தர் உயிரிழந்தார்.
காஷ்மீரின் சில பகுதிகளில் மேலும் 2 நாட்கள் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளதால் அடிப்படை முகாம்களில் இருந்து பஹல்காம், பால்டால் வழியாக செல்லும் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது. இதுவே இந்த ஆண்டு ஜம்முவில் இருந்து யாத்திரை நிறுத்தப்பட்டது முதல் முறை ஆகும்.