சென்னை : “கடந்த தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டணி படுதோல்வி அடையும் என எனக்கு முன்கூட்டியே தெரியும். இந்தத் தோல்வி நான் எதிர்பார்த்தது தான்” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் வைகோ. அப்போது அவர் பேசியதாவது:
“கடந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியின் தோல்வியை நான் எதிர்பார்த்தேன். பிரச்சாரத்தின் கடைசி மூன்ற நாட்களில் ஒரு சில மாற்றங்களை உணர முடிந்தது.
தேர்தல் பிரச்சாரத்தின் துவக்கத்தில் மக்களிடையே இருந்த எழுச்சி, ஆர்வம் குறைந்திருந்தது. 1964ம் ஆண்டில் இருந்து பல தேர்தல்களை பார்த்தவன் நான். அதனால் மக்களின் மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடியும். நான் தோல்வியை எதிர்பார்த்து அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தேன்.
ஆனால் விஜயகாந்தும், திருமாவளவனும் மட்டுமாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். நான் கோவில்பட்டியில் போட்டியிட்டிருந்தாலும் என்னை தோற்கடித்திருப்பார்கள்.
மக்கள் நலக் கூட்டணியின் இந்த வீழ்ச்சிக்கு பணமே காரணம். திமுகவும், அதிமுகவும் மறைமுக ஒப்பந்தம் செய்து கொண்டு அதன்படி அனைத்து இடங்களிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தார்கள். அந்த பணத்தை ஏழைகள் வாங்கியிருந்தால் கூட பரவாயில்லை. நடுத்தர வர்க்கத்தினரும், பணக்காரர்களும் கூட அந்த பணத்தை வாங்கியதை நினைத்தால் தமிழகத்தின் நிலை வெட்கப்படும் அளவுக்கு உள்ளது.
திமுகவை தோல்வி அடைய வைக்க நான் கருவியாகப் பயன்படுத்தப்பட்டதாக சொல்வதே திமுக தான். நான் 29 ஆண்டுகளாக திமுகவில் இருந்தேன். அந்த கட்சிக்காக பாடுபட்டேன். நாட்டிலேயே கட்சி தலைவரை கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறி கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டது நானாகத்தான் இருக்கும். இதற்கு என்ன சொல்வது. அது பொறுப்பில்லாத குற்றச்சாட்டு” – இவ்வாறு வைகோ தெரிவித்தார்.