டில்லி:

வங்கிகளில் பல கோடி ரூபாய்களை கடன் வாங்கிவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லும் இந்திய தொழிலதிபர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. விஜய் மல்லையாவை தொடர்ந்து நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் இந்த பட்டியலில் இணைந்துள்ளனர். இதன் மூலம் 31 பேர் இவ்வாறு வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து வங்கிகளில் கடன் வாங்கி நிலுவை வைத்திருக்கும் 91 தொழிலதிபர்கள் அடங்கிய பட்டியலை மத்திய அரசு தயார் செய்துள்ளது. இவர்கள் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரூ.50 கோடிக்கு மேல் வங்கிகளில் கடன் பெற பாஸ்போர்ட் விபரங்களை தெரிவிக்க வேண்டும். ஏற்கனவே கடன் பெற்றிருப்பவர்களிடமும் பாஸ்போர்ட் விபரங்களை கேட்டு பெற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியர்களின் 400 நிறுவனங்கள் இதுபோல் கடனை திருப்பி செலுத்தும் திறன் இருந்தும் நிலுவை வைத்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய நிறுவனங்களின் தலைவர்கள், இயக்குனர்கள், உரிமையாளர்கள் திறன் கொண்ட வராக்கடனாளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது வரை வெளிநாடு தப்பி ஓடிய தொழிலதிபர்கள் சுமார் 100 கோடி ரூபாயை சுருட்டிச் சென்றுள்ளனர்.

அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. இந்த சமயத்தில் மோசடி தொழிலதிபர்கள் விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்திய வங்கிகளில் 210 பில்லியன் டாலர் மதிப்பிலான வராக்கடன் இருப்பது தெரியவநதுள்ளது. இதை வசூலிக்க திவால் விதிமுறைகளை அரசு கடுமையாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.