அலகாபாத் :
ஹத்ராஸ் கூட்டுப் பாலியல் வன்முறையால் உயிரிழந்த இளம்பெண் விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது, குறிப்பாக பெண்களை பெற்ற தாய்மார்களின் மனசாட்சியை உலுக்கியது.
விசாரணை என்ற பெயரில் பெண்ணின் பெற்றோரை பிடித்து வைத்துவிட்டு, சடலத்தை தாங்களாகவே இரவு 2 மணிக்கு பெட்ரோல் ஊற்றி எரித்த போலீசார் மீது அலகாபாத் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்துள்ளது.
இன்று இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி, பணக்கார குடும்பத்தை சேர்ந்த பெண்ணாக இருந்தால் இப்படி செய்திருப்பீர்களா ?
அவர் பாலியல் துன்புறத்தலுக்கு ஆளாகவில்லை என்பதை எப்படி நீங்கள் தீர்மானித்தீர்கள் ? வழக்கு விசாரணை முடிந்துவிட்டதா ? என்று அடு்க்கடுக்கான கேள்விகளால் போலீசாரை மிரள வைத்த நீதிபதி, 2013 ஆண்டு அமலுக்கு வந்த பாலியல் சட்டத்தை படித்துப்பாருங்கள் என்று மூத்த போலீஸ் அதிகாரி பிரசாந்த் குமாரிடம் காட்டமாக கூறினார்
ஹத்ராஸ் சம்பவத்தில் போலீசாரின், மனித உரிமை மீறல், விதி முறைகளை மீறி சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டது, இந்து முறைப்படி தகனம் செய்யப்பட்டதா என்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் விசாரிக்கப்படவுள்ளது.
செப்டம்பர் 29 ம் தேதி இறந்த இளம்பெண்ணின் உடலை, சட்டம் ஒழுங்கு நிலைமை கருதியே இரவு நேரத்தில் எரித்ததாக போலீசார் தெரிவித்ததாக வழக்கறிஞர் சீமா செய்தியாளர்களிடம் கூறினார். அக்டோபர் 1 ம் தேதி தொடரப்பட்ட இந்த வழக்கு, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.