அலகாபாத்: புதிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராடியவர்களை அடையாளப்படுத்தும் விளம்பரப் பலகைகள் மற்றும் போஸ்டர்கள் உள்ளிட்ட அம்சங்களை, லக்னோவில் அப்புறப்படுத்துமாறு அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இம்மாதம் 16ம் தேதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு, லக்னோ மாவட்ட நீதிபதி மற்றும் லக்னோ மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளது நீதிபதி கோவிந்த் மத்தூர் மற்றும் நீதிபதி ரமேஷ் சின்ஹா அடங்கிய அமர்வு.
மேற்குறிப்பிட்ட விளம்பரப் பலகைகள் மற்றும் போஸ்டர்கள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்கள், பெயர்கள் மற்றும் முகவரிகளை வெளிப்படையாக தெரிவிக்கும் வகையில் பொதுவெளியில் பயன்படுத்தப்பட்டன.
எனவே, இந்த மனித உரிமை மீறலை எதிர்த்து, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பினர்.
மாவட்ட நிர்வாகத்தின் இந்த செயலை, நீதியற்றது என்றும், ஒரு தனிமனிதனின் உரிமை மற்றும் சுதந்திரத்தை நசுக்குவது என்றும் குறிப்பிட்டது நீதிமன்றம்.