சென்னை:

10% இட ஒதுக்கீட்டுக்கு தமிழகத்தை சேர்ந்த 16 கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்பட  6 கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக நேற்று முதல்வர் எடப்பாடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில்,  திமுக, மதிமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், விடுதலைச்சிறுத்தைகள், பாமக, உள்ளிட்ட கட்சிகள் 10% இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

பாஜக, அதிமுக, தேமுதிக, காங்கிரஸ், புதிய தமிழகம், மார்க்கிஸ்ட், உள்ளிட்ட 6 கட்சிகள் 10% இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு தெரிவித்தன.

‘தலைமை செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் சார்பில் போபண்ணா, மார்க்சிஸ்ட் சார்பில் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் முத்தரசன், பா.ம.க. சார்பில் ஜி.கே.மணி, தி.க. சார்பில் வீரமணி, மக்கள் நீதிமய்யம் சார்பில் கமல்ஹாசன், நாம் தமிழர் சார்பில் சீமான் உள்பட அனைத்து கட்சியினரும் பங்கேற்றனர்.

துணைமுதல்வர் ஓபிஎஸ் – அதிமுக

கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பொருளாதாரத்தில் நலிவுற்ற இட ஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினருக்கு பத்து சதவிகித இட ஒதுக்கீடு வழங்க கூடுதல் மருத்துவ படிப்பு இடங்களை ஏற்படுத்த தேவையான கருத்துருக்களை அனுப்பி வைக்குமாறு இந்திய மருத்துவ கவுன்சில் மாநில அரசிடம் கோரி உள்ளது என்றார்.

10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதற்காக 1000 கூடுதல் படிப்பு இடங்கள் உருவாக்கப்படும் என்ற அவர், அதில் மத்திய அரசின் ஒதுக்கீடான 150 இடங்கள் போக, தமிழக அரசுக்கு 850 இடங்கள் கிடைக்கும் என்றார். இதில் 383 இடங்கள் பொருளாதாரத்தில் நலிவுற்ற இட ஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினருக்கு வழங்கினால், தற்போது இட ஒதுக்கீடு பெறும் பிரிவினருக்கு கூடுதலாக 586 இடங்கள் கிடைக்கும் என்று அவர் குறிப்பிட்டார். இடஒதுக்கீட்டை செயல்படுத்தினால் தமிழக மருத்துவ கல்லூரிகளில் 25% இடங்களை மத்திய அரசு அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.

ஸ்டாலின்: திமுக

இந்திய அரசியல் சட்டத்தில் புகுந்து இருக்கும் இந்த “பொருளாதாரப் பிரிவு”, இடஒதுக்கீட்டுக் கொள்கையையே நீர்த்துப் போகச் செய்து விடும் என்றார். அந்த உண்மையை அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற அவர், இடஒதுக்கீடு என்பது ஏழ்மையைப் போக்குவதற்கான கருவி அல்ல என்பதை உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் உறுதி செய்து உள்ளது என்றார்.

பல நூற்றாண்டுகளாக உரிய வாய்ப்புகள் மறுக்கப்பட்ட – சமூக ரீதியாகவும், கல்வி நிலையிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கும், பட்டியல் இன, பழங்குடியின மக்களுக்கும் அரசியல் சட்டம் வழங்கியஉரிமையே இடஒதுக்கீடு என்ற அவர், அந்த உரிமை பறிக்கப்பட தமிழக அரசு இடமளித்து விடக்கூடாது என்றார்.

கே.எஸ்.அழகிரி – காங்கிரஸ்

69% இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பு ஏற்படாமல் 10% இடஒதுக்கீடு வழங்குவதை தமிழக காங்கிரஸ் ஆதரிக்கிறது என்று  அனைத்துக்கட்சி கூட்டத்தில் தமிழக காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு, தி.மு.க. பா.ம.க. ம.தி.மு.க. மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட 16 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

காங்கிரஸ், பா.ஜ.க., தேமுதிக, த.மா.கா, புதிய தமிழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய 6 கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.  இந்த கூட்டத்திற்கு அ.ம.மு.க., கொ.ம.தே.க. ஆகிய இரு கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை..

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு பாதிப்பு வராமல் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்றார்..