போபால்: மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்ட 16 அமைச்சர்களும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக மையம் கொண்டுள்ள அரசியல் குழப்பம் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. முதல்வர் கமல்நாத்திற்கு எதிராக மற்றொரு முக்கிய காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு பெற்ற 17 சட்டமன்ற உறுப்பினர்கள் பெங்களூருவுக்கு சென்றுவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்நிலையில் முதல்வர் கமல்நாத் தனது இல்லத்தில் கட்சி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான திக்விஜய்சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்ட 16 அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர். இந்நிலையில் இன்று(மார்ச் 10) மாலை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் அவசரக்கூட்டம் மத்தியப் பிரதேச முதல்வர் தலைமையில் நடைபெறுகிறது.

அக்கூட்டத்தில், மாநில அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுளளதாகவும், முதலமைச்சர் கமல்நாத் தனது அமைச்சர்கள் அனைவரையும் ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகைய அடுத்தடுத்த திருப்பங்களால், மத்தியப் பிரதேச அரசியல் களம் விறுவிறுப்பாக காணப்படுகிறது.