மும்பை: நான் தேசியவாத காங்கிரசில் தான் இருக்கிறேன், என்றும் அந்த கட்சியில் தான் இருப்பேன் என்று மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் கூறி இருக்கிறார்.
யாரும் என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத அளவுக்கு ஒரே இரவில் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்திருக்கிறது பாஜக. முதலமைச்சராக பட்னாவிசும், துணை முதலமைச்சராக அஜித் பவாரும் பதவி ஏற்றுக் கொண்டு இருக்கின்றனர்.
இதை எதிர்த்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங். தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை நடத்த இருக்கிறது. இந் நிலையில், எல்லா சர்ச்சைகளுக்கும் காரணமானதாக கை காட்டப்படும் அஜித் பவார், தாம் இன்னும் என்சிபியில் தான் இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.
இது குறித்து அவர் 2 டுவிட்டர் பதிவுகளை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் என்சிபியில் தான் இப்போதும் இருக்கிறேன். என்றும் அந்த கட்சியில் தான் இருப்பேன். சாஹேப் (சரத் பவார்) தான் எனது தலைவர் என்று கூறியிருக்கிறார்.
எங்களின் பாஜக, தேசிய வாத காங்கிரஸ் கூட்டணியானது நிலையான ஆட்சியை மகாராஷ்டிராவில் வழங்கும். அடுத்த 5 ஆண்டுகள் இந்த கூட்டணி ஆட்சியை நடத்தும். மக்கள் மற்றும் மாநில நலன்களுக்காக கடுமையாக உழைப்போம் என்று கூறி இருக்கிறார்.
மற்றொரு டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: இனி எதற்காகவும் கவலைப்பட வேண்டாம். ஆல் இல் வெல்(எல்லாம் நன்றாக போய் கொண்டு இருக்கிறது) கொஞ்சம் பொறுமை தேவைப்படுகிறது. ஆதரவு அளித்த உங்கள் அனைவருக்கும் மிகுந்த நன்றி என்று கூறி இருக்கிறார்.