புதுடெல்லி: இந்திய நிர்வாக செயல்பாட்டை பொறுப்புத்தன்மை வாய்ந்தவையாக வைத்திருப்பதற்கு உருவாக்கப்பட்ட அனைத்து அமைப்புகளும், இன்றைய இந்தியாவில் திட்டமிட்டு சிதைக்கப்படுகின்றன என்று வேதனையுடன் பேசியுள்ளார் ஓய்வுபெற்ற டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.பி.ஷா.
அவர் கூறியுள்ளதாவது, “உச்சநீதிமன்றத்தின் இன்றைய குளறுபடிகள், தற்செயலானது அல்ல. அதுவொரு திட்டமிட்ட அரசியல் செயல்பாடாகத் தோன்றுகிறது.
பெரும்பான்மை வாதத்திற்கு எதிராக செயல்படுவதோடு, சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதன் தங்களின் பொறுப்புகள் குறித்தும் நீதிமன்றங்கள் உணர வேண்டும். பெரும்பான்மையினரின் விருப்பத்தை பிரதிநிதித்துவப் படுத்துவதிலிருந்து ஜனநாயகம் தனது சட்டப்பூர்வ தன்மையைப் பெறுகிறது. ஆனால், இத்தகைய ஜனநாயகத்தில், சிறுபான்மையினர் பெரியளவில் பாதிக்கப்படுகின்றனர் என்பது கண்டுகொள்ளப்படுவதில்லை.
அரசியலமைப்பை பாழ்ப்படுத்தும் சட்டங்களைத் தடைசெய்யும் வகையில், நீதிமன்றங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். தற்காலத்தில், நீதிமன்றங்கள் சுதந்திரமாக செயல்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
இதற்கு, அரசுதான் காரணம் என்பது வெளிப்படையாகத் தெரியும் ரகசியம். அதை அரசு அதிகாரம் எப்படி செய்கிறது என்பதையும் நம்மால் காண முடிகிறது. நீதிமன்றத்தைக் கைப்பற்றுவதற்கு, அரசுக்கு ஆதரவான நீதிபதிகளைக் கண்டெடுத்து, அவர்களையே நியமிக்க வேண்டும் என்ற அவசியமெல்லாம் இல்லை. அது கடினமான காரியமும்கூட.
அரசுக்கு ஆதரவான ஒரு தலைமை நீதிபதியோ அல்லது குறிப்பிட்ட சில நீதிபதிகளோ, அரசுக்கு தேவையானதை செய்துவிட முடியும். இதுதான் தற்போது இந்தியாவில் நடந்துகொண்டுள்ளது. சுதந்திரமாக செயல்படும் திறமையுள்ள நீதிபதிகள் முக்கிய விஷயங்களிலிருந்து திட்டமிட்டுப் புறந்தள்ளப்படுகிறார்கள்.
உச்சநீதிமன்றத்தில், தலைமை நீதிபதிகளாக பதவி வகித்த கடைசி 3 தலைமை நீதிபதிகளும், பின்னர் அரசு அதிகாரத்திற்குள் எப்படி உள்ளிழுக்கப்பட்டார்கள் என்பதைப் பார்க்க வேண்டியுள்ளது” என்று பேசினார் ஏ.பி.ஷா.