அன்றாடம் பயன்படுத்தும் உப்பு மற்றும் சர்க்கரையில் ‘மைக்ரோ பிளாஸ்டிக்’ இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனம் டாக்ஸிக்ஸ் லிங்க் நடத்திய இந்த ஆய்வின் முடிவுகளை ‘மைக்ரோ பிளாஸ்டிக் இன் சால்ட் அண்ட் சுகர்’ என்ற தலைப்பில் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்விற்காக மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உப்பு மற்றும் சர்க்கரை ஆகியவற்றை ஆன்லைனிலும் கடைகளிலும் இருந்து வாங்கப்பட்டுள்ளது.
இதில் பேக்கிங் செய்யப்பட்ட மற்றும் லூசில் கிடைக்கக்கூடிய உப்பு மற்றும் சர்க்கரை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. மொத்தம் 10 உப்பு மாதிரிகளும் 5 சர்க்கரை மாதிரிகளும் ஆய்வு செய்யப்பட்டது அதில் இரண்டு உப்பு மாதிரிகள் மற்றும் ஒரு சர்க்கரை மாதிரி தவிர மற்ற அனைத்தும் பிராண்டட் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனை செய்யப்பட்ட உப்பு மற்றும் சர்க்கரை மாதிரிகளில் ஒரு கிலோ உலர் எடையில் 6.71 முதல் 89.15 துண்டுகள் மற்றும் 0.1 மிமீ முதல் 5 மிமீ அளவு வரை மைக்ரோபிளாஸ்டிக் இருந்ததாகவும். அவை இழைகள், துகள்கள் மற்றும் துண்டுகள் வடிவில் காணப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
சர்க்கரை மற்றும் உப்பு மாதிரிகளில் காணப்பட்ட இந்த மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் வெள்ளை, நீலம், சிவப்பு, கருப்பு, ஊதா, பச்சை, மஞ்சள் உள்ளிட்ட எட்டு வெவ்வேறு வண்ணங்களில் இருந்தாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சோதனை செய்யப்பட்ட பத்து உப்பு மாதிரிகளில், மூன்று பேக்கேஜ் செய்யப்பட்ட அயோடைஸ் உப்பு, மூன்று இந்துப்பு மாதிரிகள் (இரண்டு ஆர்கானிக் பிராண்டுகள் உட்பட), இரண்டு கடல் உப்பு மாதிரிகள் மற்றும் இரண்டு உள்ளூர் பிராண்டுகள் அடங்கும். இதில் மற்ற உப்புகளை விட அயோடைஸ் உப்பில் அதிகளவு மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.