சென்னை

வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி அன்று 95 ஆம் அகில இந்திய எம் சி சி முருகப்பா தங்கக் கோப்பை ஆக்கி போட்டி தொடங்க உள்ளது.

செப்டம்பர் 19 முதல் 29ஆம் தேதி வரை 95வது அகில இந்திய எம்சிசி – முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டி சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற உள்ளது. நேற்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் செயல் தலைவர் அருண் முருகப்பன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் அப்போது,:

“95 ஆவது அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டி வருகின்ற
செப்டம்பர் 19ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை சென்னை எழும்பூரில் உள்ள மேயர்
ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ. 7 லட்சம் பரிசுத்தொகையும், இரண்டாமிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.5 லட்சம்
பரிசுத்தொகையும், மூன்றாவது மற்றும் நான்காவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.50,000 பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளன.

மேலும் சிறந்த முன்கள வீரர், சிறந்த மிட்ஃபீல்டர், சிறந்த கோல் கீப்பர், நம்பிக்கைக்குரிய வீரர் இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் ஆகியோர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளன. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியன் ரயில்வேஸ், முன்னாள் சாம்பியன் இந்தியன் ஆயில் கார்பரேஷன், தமிழ்நாடு ஹாக்கி அணி, ஒடிஷா ஹாக்கி என மொத்தம் 10 அணிகள் பங்கேற்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 10 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் மற்றும் நாக் அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இரண்டு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும். தினமும் மூன்று போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் போட்டி மதியம் 2.15 மணிக்கும், இரண்டாவது போட்டி மாலை 4 மணிக்கும் மூன்றாவது போட்டி இரவு 6 மணிக்கும் நடைபெறவுள்ளன. மூன்றாவது போட்டி மின் ஒளியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பார்வையாளர் அனைவருக்கும் இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து அணிகளிலும் இந்திய வீரர்கள் இடம்பெறுவார்கள் என்பதால், ஆட்டத்தில் அணல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது”

என்று தெரிவித்துள்ளார்.