திருப்பதி
திருப்பதி மலையில் உள்ள அனைத்து தனியார் உணவகங்கள் மற்றும் ஓட்டல்கள் மூடப்பட்டு இலவச உணவு வழங்கப்பட உள்ளது.
நேற்று திருப்பதி மலையில் உள்ள அன்னமையா பவனில் தேவஸ்தான அறங்காவலர் குழுக் கூட்டம் நடந்தது. இதற்கு அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் 2022-23 ஆம் ஆண்டுக்கான ரூ.3096.40 கோடி பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பிறகு சுப்பா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர்,
“இன்று நடந்த அறங்காவலர் குழுக் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
கடந்த நிதியாண்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.3000.76 கோடிக்கு பட்ஜெட் போடப்பட்டது. நடப்பு நிதியாண்டில் ரூ.3096.40 கோடி பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனாவுக்கு முன்பு இருந்ததைப் போல் இலவச தரிசனத்துக்கு அதிக அளவில் பக்தர்களை அனுமதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மீண்டும் சுப்ரபாதம், அர்ச்சனை, கல்யாண உற்சவம் உள்ளிட்ட அனைத்து ஆர்ஜித சேவைகளும் தொடங்கப்பட உள்ளது. இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.230 கோடி செலவில் குழந்தைகள் நல மருத்துவமனை கட்டப்படும்.
திருப்பதி மலையில் உள்ள தனியார் உணவகங்கள், மற்றும் ஓட்டல்கள் முற்றிலும் மூடப்பட்டு அனைவருக்கும், இலவச உணவு வழங்கப்படும்.
இனி பக்தர்கள் யாரும் பணம் கொடுத்து உணவு வாங்கி சாப்பிடுவது இல்லாமல் செய்யப்பட்டு சாதாரண பக்தர்கள் முதல் அமைச்சர்கள், பிரமுகர்கள் என அனைவருக்கு இலவச உணவு வழங்கப்படும்.
ஏற்கனவே அறிவியல் மையம் அமைக்க வழங்கிய 70 ஏக்கரில் 20 ஏக்கரில் அறிவியல் மையம் அமைக்கப்பட்டு மீதமுள்ள 500 ஏக்கரில் தியான மையம், யோக மையம், மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளுடன் கூடிய ஆன்மீக மையம் அமைக்கப்படும். வரும் ஏப்ரலில் இதற்கு அடிக்கல் நாட்டப்படும்”
எனத் தெரிவித்தார்.