பாட்னா:
கடந்த 2013ம் ஆண்டு புத்தகயாவில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்கு காரணமான குற்றவாளிகள் 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
உலகப் புகழ்பெற்ற புத்தகயா பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு அடுத்தடுத்து தொடர் குண்டுவெடிப்புகள் நடந்தன. இந்த குண்டுவெடிப்பில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் வெளிநாட்டு பயணிகள் உள்பட புத்தமத பிட்சுகள் பலர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குண்டுவெடிப்பை நடத்திய, இந்தியன் முஜாகிதீன் அமைப்பு என கூறப்பட்டது.
அதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து வந்த தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளி, இந்தியன் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்தவர்களான இம்தியாஸ் அன்சாரி, ஹைதர் அலி, முஜீப் உல்லா, ஒமர் சித்திக், அசாருதீன் குரேஷி ஆகியோரை கைது விசாரணை நடத்தினார்.
இதுதொடர்பான வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, குற்றவாளிகள் மீதான குற்றம் உறுதிசெய்யப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது. அதைத்தொடர்ந்த இன்று குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிக்கப்பட்டது.
இன்று தீர்ப்பு வழங்கிய என்.ஐ.ஏ நீதிமன்றம், குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.