லிகார்

லிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் இந்து அமைப்பினர் நடத்தி வரும் வன்முறைகளால் வருடாந்திரத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகார் நகரத்தில் அமைந்துள்ளது அலிகார் முஸ்லிம்  பல்கலைக்கழகம்.   இந்தப் பல்கலைக் கழகத்தில் இஸ்லாமிய தலைவர்களில் ஒருவரான முகமது அலி ஜின்னாவின் படம் இடம் பெற்றுள்ளது.   ஜின்னா இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிய போராடியவரும் பாகிஸ்தானின் முதல் அதிபரும் ஆவார்.  இதற்கு இந்து அமைப்பான இந்து யுவ வாகினி எதிர்ப்பு தெரிவித்தது.

இதை ஒட்டி கடந்த 2 ஆம் தேதி அந்த அமைப்பு போராட்டம் ஒன்றை நடத்தியது.  அந்தப் போராட்டத்தில் கடும் வன்முறை வெடித்ததால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.   போராட்டங்கள் தொடர்வதோடு வன்முறை சம்பவங்களும் தொடர்கின்றன.   இந்து அமைப்பான யுவ வாகினி அமைப்பை சேர்ந்த இருவர் வன்முறை சம்பவங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் பல்கலக் கழகத்துக்கான வருடாந்திர தேர்வுகள் நேற்று (07/05/2018) முதல் நடைபெற இருந்தன.

நேற்று அலிகார் பல்கலைக்கழக துணை வேந்தர் தாரிக் மன்சூர், “பல்கலைக் கழகத்தின் வருடாந்திர தேர்வுகள் மே 7 முதல் நடைபெற இருந்தன.   தற்போது பல்கலைக் கழகத்தின் அமைதியற்ற சூழ்நிலைகளால் அந்த தேர்வுகள் வரும் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுள்ளது.   தற்போது நிலவரம் சற்றே மேம்பட்டுள்ளது.  பல்கலைக் கழகத்தில் முழுமையான அமைதி நிலவ மாணவர்கள் தாமே முன் வந்து நிர்வாகத்துக்கு உதவ வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.