பாரிஸ் : பாலின சர்ச்சையில் சிக்கி விமர்சனத்துக்கு உள்ளான அல்ஜெரீய’ ‘பெண்’ மல்யுத்த வீராங்கனை இமானே கலீப் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். சீன வீராங்கனை யாங் லியூவை வீழ்த்தி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அங்கு கடந்தவாரம் ஒலிம்பிக் குத்துச் சண்டை போட்டியில் அல்ஜெரீய வீராங்கனை இமானே கலீப் ஆண் என்று இத்தாலி வீராங்கனை கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது கடந்த ஆக. 1ம் தேதி அங்கு நடந்த குத்துச்சண்டை போட்டியில் அல்ஜீரியா வீராங்கனை இமானே கெலிஃப் 63 கிலோ எடைப் பிரிவில் இத்தாலியின் ஏஞ்சலா கரினியை எதிர்கொண்டார். இருப்பினும், இந்தப் போட்டியில் இருந்து வெறும் 46 நொடிகளில் ஏஞ்சலா கரினி வெளியேறினார். கெலிஃப்க்கு எதிராகப் போட்டியிட விரும்பவில்லை என்று ஏஞ்சலா கரினி கூறினார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, இமானே கெலிஃப்பிற்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துக்கள் பரவின. சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இமானே கெலிஃப் பெண்ணாக பிறந்தாலும் மரபணு ரீதியாக அவர் ஆண் என்று பலரும் தெரிவித்தனர். இதனால் இமானே கெலிஃப்பை பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்ளவே அனுமதித்து இருக்கக்கூடாது என்று பலரும் விமர்சித்தனர்.
ஆனால், இமானே கெலிஃப் பெண் என அவரது குரோமசோம் உள்பட பல்வேறு மருத்துவ ஆய்வுகள் மூலம் அல்ஜேரிய மருத்துவர்கள் பதில் அளித்தனர். இதனால், அவர் போட்டிகளில் தொடர ஒலிம்பிக் கமிட்டி பச்சைக்கொடி காட்டியது.
இதைத்தொடர்ந்து மகளிருக்கான 66கிலோ எடைப்பிரிவில் இமானே கலீப் கலந்துகொண்டு, சீன வீராங்கனை யாங் லியூவை வீழ்த்தி தங்கம் வென்று சாதனை படைத்தார்.