‘மது அருந்துதல் புற்றுநோயை உண்டாக்கும்’ என்ற எச்சரிக்கை மதுபான பாட்டில்கள் மீது அவசியம் என்று அமெரிக்க அரசு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதிபர் ஜோ பைடன் அரசின் கீழ் உள்ள பொது சுகாதார துறையில் அமெரிக்க சர்ஜன் ஜெனரலாக செயலாற்றிவரும் விவேக் மூர்த்தி இதனை வலியுறுத்தியுள்ளார்.

“அமெரிக்காவில் புகை பிடிப்பது மற்றும் உடல் பருமனுக்கு அடுத்தபடியாக புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய மூன்றாவது முக்கிய காரணியாக மது அருந்துதல் உள்ளது” என்று விவேக் மூர்த்தியின் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

அமெரிக்க உணவு வழிகாட்டுதல்கள் தற்போது ஆண்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு அல்லது அதற்கும் குறைவான மது பானங்களையும், பெண்களுக்கு ஒரு நாளைக்கு ஒன்று அல்லது அதற்கும் குறைவாகவும் பரிந்துரைக்கின்றன.

இந்த நிலையில் மது அருந்துதல் வரம்புகள் குறித்த வழிகாட்டுதல்களை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் மூர்த்தி அழைப்பு விடுத்துள்ளார்.

மக்கள் எவ்வளவு குடிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதேவேளையில் புற்றுநோய் அபாயம் குறித்தும் அவர்களுக்கு அறிவுறுத்தவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

மது அருந்துவது மார்பகம், பெருங்குடல் மற்றும் கல்லீரல் புற்றுநோய் உட்பட ஏழு வகையான புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது, ஆனால் பெரும்பாலான அமெரிக்க நுகர்வோர் இதைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்று யு.எஸ் சர்ஜன் ஜெனரல் விவேக் மூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

இதனால், மதுபானங்கள் மீதான லேபிளில் புற்றுநோய் அபாயங்கள் பற்றிய எச்சரிக்கையைக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிகரெட் பாக்கெட்டின் மீது உள்ளது போன்ற புகைப்படம் இல்லாவிட்டாலும் மது பாட்டில்களின் லேபிள்களில் புற்றுநோய் குறித்த எச்சரிக்கை இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க சர்ஜன் ஜெனரல் விவேக் மூர்த்தி தெரிவித்திருக்கும் இந்த கருத்துக்கள் மீது அமெரிக்க காங்கிரஸ் இறுதி முடிவு எடுக்கும் என்று கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் இன்னும் இரண்டு வாரங்களில் பதவியேற்க உள்ள நிலையில் விவேக் மூர்த்தியின் இந்த பரிந்துரையை அடுத்ததாக வரவிருக்கும் அமெரிக்க சர்ஜன் ஜெனரல் அதனை எப்படி அமல்படுத்துவார் என்பதை பொறுத்தே இதன் செயல்பாடு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.