Jpeg

மிழகத்தில்  ஆலங்குடி மற்றும் திட்டையில் இன்று குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற்றது.

குருபெயர்ச்சி விழாவையொட்டி, திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குருபகவான் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

நவக்கிரக ஸ்தலங்களில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி குரு ஸ்தலமாக விளங்குகிறது.

நவக்கிரங்களில் நன்மை தரக்கூடிய, குரு கிரகம் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயர்வது வழக்கம்.

வடக்குத் திசை குருவிற்கு உரியது. குருவிற்கு உரிய தலம் ஆலங்குடி. இன்று  குருபெயர்ச்சி விழா ஆலங்குடியில் கோலாகலமாக நடைபெற்றது.

அதன்படி, இன்று காலை 9.32 மணிக்கு கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு குரு பகவான் இடம் பெயர்ச்சி அடைந்தார்.

இதையொட்டி குரு பரிகாரத் தலமான, திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் ஆலயத்தில் குருபகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று குருபகவானை வழிபட்டனர்.

குரு பரிகார தலமாக உள்ள இந்த ஆலயத்தின் சிறப்புகள் என்ன என்பதை தெரிந்துகொள்ளலாம்.

தேவர்களைக் காக்க ஆலகால விஷத்தை இறைவன் குடித்ததால் ஆலங்குடி என்று பெயர் வந்ததாக வரலாறு கூறுகிறது. இவ்வூரில் விஷத்தால் எவர்க்கும் எவ்விதத் தீங்கும் உண்டாவ தில்லை என்பதும் அங்கு வாழ்ந்து வரும் மக்களின் அசராத நம்பிக்கை.

கருநிறமுள்ள பூளைச் செடியைத் தலவிருட்சமாகக் கொண்டுள்ளதால் திருஇரும்பூளை என்றும், அழைக்கப்படுகிறது.

காளமேகப் புலவர் பாடல் ஆலங்குடி தலத்தைப் பற்றி அற்புதமாக பாடியுள்ளார்.

“ஆலங்குடியானை ஆலாலம் உண்டானை
ஆலங் குடியான் என்று ஆர் சொன்னார் – ஆலம்
குடியானேயாகில் குவலயத்தோரெல்லாம்
மடியாரோ மண் மீதினில்”. என்று இந்த ஆலயத்தின் பெருமையை உணர்த்துகிறது.

இதேபோல் திட்டையில் உள்ள குருபகவான் ஆலயத்தில் விசேஷ பூஜை நடைபெற்றது.