சென்னை :
தமிழகத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், டெல்லி மற்றும் தமிழக கியூ பிரிவு போலீசாருக்கு பயங்கரவாதிகள் அமைப்பு தமிழில் பகிரங்க மிட்டல் கடிதம் டெலிகிராம் சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
குமரி மாவட்டத்தில் களியக்காவிளை பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் எஸ்ஐ வில்சன் பயங்கரவாதிகளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பயங்கரவாதிகளை தமிழக காவல்துறையினர் வேட்டையாடி வருகின்றனர்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக தமிழகம், கேரளம், கர்நாடக மாநிலங்களில் பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்ட நிலையில், அல்ஹிந்த் பிரிகேட் என்ற தீவிரவாத அமைப்பு சமூக வலைத்தளத்தில், தமிழில் துப்பாக்கி படங்களை வரைந்து எழுதப்பட்ட மிரட்ட்ல் கடிதத்தை பகிரங்கமாக வெளியிட்டுள்ளது.
தமிழில் எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில், டெல்லி சிறப்பு மற்றும் தமிழக கியூ பிரிவு காவல்துறையை கண்காணித்து வருவதாகவும், உரிய நேரத்தில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகள் மிரட்டல் கடிதம் குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். சமூக வலைத்தளத்தை இயக்கி வருபவர் யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டு, முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.