லக்னோ:
உ.பி.யில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவுக்கும், அவரது மகன் அகிலேஷுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சித் தலைவர்கள் மத்தியில் கோஷ்டி பூசல் நிலவி வருகிறது. முலாயம் சிங்குக்கு அவரது சகோதரரும், முன்னாள் அமைச்சருமான சிவ்பால் சிங் யாதவ் உள்ளிட்டோர் ஆதரவளித்து வருகின்றனர். அகிலேஷுக்கு அவரது சித்தப்பாவும் சமாஜ்வாடி மூத்த தலைவருமான ராம்கோபால் யாதவ் உள்ளிட்டோர் ஆதரவு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் லக்னோவில் சமாஜ்வாடி கட்சி அலுவலகத்தில் முலாயம் சிங்கியின் 79வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் முலாயம் சிங் கேக் வெட்டினார். இதில் அகிலேஷ் யாதவும் கல ந்துகொண்டார். முலாயம் சிங் காலில் விழுந்து அகிலேஷ் ஆசி பெற்றார். அவருக்கு முலாயம் முதல் கேக் துண்டை ஊட்டினார்.
பின்னர் முலாயம் சிங் பேசுகையில், ‘‘எனது மகன் அகிலேஷை நான் ஆசிர்வதித்துள்ளேன். தொடர்ந்து அவரை ஆசிர்வதிப்பேன். அகிலேஷை நான் ஆசிர்வதிப்பது குறித்து விவாதம் நடக்கிறது. அகிலேஷ் முதலில் எனது மகன், பின்னர் தான் அரசியல் கட்சிக்கு தலைவர். நாடாளுமன்ற தேர்தலின் போது பொய் வாக்குறுதிகளை அளித்து பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. கருப்புப் பணத்தை மீட்டு மக்களு க்கு தலா ரூ.15 லட்சம் அளிக்கப்படும் என்று பாஜக கூறியது.
ஆனால், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ரூ.15 லட்சத்தை பல தவணைகளாக மக்களுக்கு அவர்களுக்கு கொடுக்க முடியும். ஆண்டுதோறும் ரூ.3 லட்சம் வீதம் 5 ஆண்டுகளில் வழங்கலாம். அப்படி செய்தால், வாக்குறுதியை நிறைவேற்றியதாகும்’’ என்றார்.
மேலும், அவர் பேசுகையில்,‘‘சமாஜ்வாடி கட்சியில் கிராம வாக்குச்சாவடி அளவில் கூட வெற்றி பெற முடியாதவர்களுக்கு பதவிகள் அளிக்கப்படுகிறது. இது போல், பலருக்கு பதவிகள் அளிக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைவர் ஒருவரது குடும்பத்தில் 51 பேர் உள்ளனர். ஆனால், தேர்தலில் அவருக்கு 9 வாக்குகளே கிடைத்தன.
இப்படி பட்டவர்களுக்கு சமாஜ்வாடியில் பதவிகள் அளிக்கப்பட்டுள்ளது. அகிலேஷ் யாதவ் தலைமையிலான முந்தைய சமாஜ்வாடி அரசு, மக்கள் நல பணிகளை செய்தபோதிலும் சட்டமன்ற தேர்தலில் 45 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இது வெட்கப்படக் வேண்டிய விஷயம்’’ என்றார்
அயோத்தியில் 1990ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி கரசேவகர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 28 பேர் பலியாகினர். இதுதொடர்பான உத்தரவை அப்போது முதல்வராக இருந்த முலாயம் சிங் யாதவ் தான் பிறப்பித்தார்.
இந்த சம்பவம் குறித்து முலாயம் சிங் யாதவ் பேசுகையில், ‘‘நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை காக்க, மேலும் எத்தனை பேர் கொல்லப்பட வேண்டுமோ, அத்தனை பேரை பாதுகாப்புப் படையினர் கொன்றிருப்பர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இஸ்லாமியர்கள் ஆயுதங்களை கையில் எடுத்தனர். தங்களது வழிபாட்டுத் தலம் அழிக்கப்பட்டிருக்கும்போது, நாட்டில் வேறு என்ன மிஞ்ச இருக்கிறது என்று இஸ்லாமியர்கள் கேள்வி கேட்டனர்’’ என்றார்
முலாயம் சிங்குடன் அவரது சகோதரர் சிவ்பால் சிங் யாதவ் வரவில்லை. அதேநேரத்தில், முலாயம் சிங்குடன் பகுஜன் சமாஜ் கட்சியில் சமீபத்தில் இணைந்த எம்எல்ஏக்கள் ஆஷு மாலிக், நாரத் ராய் ஆகியோர் வந்திருந்தனர்.