மும்பை: எம்எல்ஏவாக பதவியேற்க மேடைக்கு வந்த அஜித் பவாருக்கு என்சிபி எம்எல்ஏக்கள் கைகளை தட்டி உற்சாகமாக ஆரவாரம் எழுப்பி வரவேற்றனர்.
ஒரு வழியாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் மூக்குடைப்பட்ட மகாராஷ்டிர பாஜக முதலமைச்சர் பட்னவிஸ் தமது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். போதிய எண்ணிக்கையில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இல்லாததால் தான் இந்த முடிவு என்று அவர் கூறினார்.
மேலும் அஜித் பவார் தந்த உறுதிமொழியால் தான் தாம் முதலமைச்சராக பொறுப்பேற்றதாக தெரிவித்தார். முன்னதாக, துணை முதலமைச்சராக இருந்த அஜித் பவார் தமது பதவியை ராஜினாமா செய்து, பரபரப்பை கிளப்பினார்.
அவரின் இந்த மனமாற்றத்துக்கு சரத்பவார், சுப்ரியா சுலே ஆகியோரின் வேண்டுகோளும், ஆதரவுமே காரணம் என்றும், அவர்களின் வலியுறுத்தல்களே அஜித்தின் மனதை மாற்றியதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந் நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்எல்ஏக்களும் சிறப்பு கூட்டத்தில் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு இடைக்கால சபாநாயகர் கொலம்ப்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவர்களுடன் அஜித் பவாரும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
அதற்காக அவர், விழா அரங்கத்தில் நுழைந்த போது, சுப்ரியா சுலே கட்டியணைத்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர், பொறுப்பேற்பதற்காக, அரங்க மேடைக்கு சென்றார்.
அப்போது என்சிபி எம்எல்ஏக்கள் அனைவரும் அவரை கைத்தட்டி வரவேற்று மகிழ்ச்சி ஆரவாரமிட்டனர். குடும்பம் மற்றும் கட்சி உறுப்பினர்களின் வேண்டுகோளை ஏற்று, தமது முடிவை கடைசி கட்டத்தில் அவர் மாற்றிக் கொண்டதால் அதை பாராட்டும்படியாக இந்த வரவேற்பு கிடைத்ததாக அரசியல் நிபுணர்கள் கூறி இருக்கின்றனர்.