மும்பை:

காராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா தலைமையில் ஆட்சி அமைக்க, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வந்த சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ரவூத்தை அரசியல் சாணக்கியர் என்று புகழப்பட்டு வந்த நிலையில் அவரது அரசியல் சாணக்கியம் தோல்வி அடைந்துள்ளது.

இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி குறித்து கடுமையாக விமர்சித்துள்ள சஞ்சய் ரவூத், அஜித்பவார் மகாராஷ்டிரா மாநில மக்களின் முதுகில் குத்தி விட்டார் என்றும்,  துரோகம் இழைத்துவிட்டார் என்றும் புலம்பி உள்ளார்.

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக, இழுபறி நீடித்து வந்த நிலையில்,  காங்கிரஸ்- என்சிபி- சிவசேனா கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க சஞ்சய் ரவூத் கடுமையாக பணியாற்றி வந்தார். அவரது முயற்சி வெற்றி பெற்றதாகவும், உத்தவ் தாக்கரே தலைமையில் புதிய ஆட்சி மலரும் என  நேற்று மாலை செய்தியாளர்களிடம் சஞ்சய் ரவூத் கூறினார். இதன் காரணமாக மகாராஷ்டிராவின் அரசியல் சாணக்கியர் என்று சஞ்சய் ரவூத்தை அரசியல்வாதிகள் புகழ்ந்து தள்ளினர்.

!இந்த  நிலையில் திடீர் திருப்பமாக நேற்று இரவு பாஜக- என்சிபி இடையே  கூட்டணி உருவானது. இதையடுத்து முதல்வராக தேவேந்திர பட்னவீஸும் துணை முதல்வராக அஜித் பவாரும் பதவியேற்று உள்ளனர். அஜித் பவாருக்கு என்சிபியை சேர்ந்த 22 எம்எல்ஏக்களின் ஆதரவும், பாஜகவுக்கு சிவசேனா எம்எல்ஏக்கள் சிலரின் ஆதரவு மற்றும் சுயேச்சைகள் ஆதரவும் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று காலை பாஜக, என்சிபி கூட்டணி பதவி ஏற்றது குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ரவூத்,  மகாராஷ்டிரா மாநில நிலமை குறித்து, உத்தவ் தாக்கரேவும் சரத் பவாரும்  பேசி வருவதாகவும், அவர்கள் இருவரும் இணைந்து செய்தியாளர்களையும் சந்திக்க வாய்ப்புள்ளது என்று கூறினார்.

மேலும்,  அஜித் பவாரும் அவருக்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏக்களும் சத்ரபதி சிவாஜியையும் மகாராஷ்டி ரத்தையும் அவமதித்துவிட்டார்கள். அஜித் பவார் முதுகில் குத்திவிட்டார் என்று புலம்பியவர், நேற்று வரை அஜித் பவார் எங்களுடன்தான் இருந்தார். அவரது நடவடிக்கைகள் சந்தேகத்தை எழுப்பின. பேச்சுவார்த்தையின் போது திடீரென எழுந்து சென்று விட்டதாகவும் கூறினார்.

தேர்தலுக்கு முன்பே எம்எல்ஏ பதவியை அஜித் பவார் ராஜினாமா செய்ததில் ஏதோ உள்நோக்கம் இருந்துள்ளதை இப்போது அறிகிறோம்.  அஜித் பவார், சரத்பவாருக்கு துரோகம் இழைத்துவிட்டார் என்று கூறியுள்ளார் சஞ்சய் ரவூத்…

சிவசேனாவின் பிடிவாதமான முதல்வர் பதவி கோரிக்கை காரணமாக, அங்கு அரசியல் குழப்ப்ம நீடித்து வந்ததாகவும், அரசியல் சாணக்கியர் சஞ்சய் ரவூத்தின் சாணக்கியத்தனம், பாஜகவிடம் எடுபடவில்லை என்றும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.