மும்பை:

காராஷ்டிரா மாநிலத்தில், பாஜகவுக்கு ஆதரவு அளித்த, தேசிவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் அஜித்பவார் தற்போது தனிமைப் படுத்தப்பட்டு உள்ளார். அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்த எம்எல்ஏக்கள் அனைவரும் மீண்டும் சரத்பவாரிடமே தஞ்சம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக, மொத்தமுள்ள  54 என்சிபி எம்.எல்.ஏக்களில், சரத்பவாரை தவிர மற்ற  53 பேரும், சரத்பவாருக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் கடந்த ஒருமாதமாக இழுபறி நீடித்து வந்த நிலையில், திடீரென நேற்றுமுன்தினம் பாஜக, அஜிதிபவார் துணையுடன் ஆட்சி அமைத்தது. இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சி அவசரம் அவசரமாக அதிகாலையிலேயே நடைபெற்றது. முன்னதாக, அங்கு கவர்னர் ஆட்சி விலக்கப்படுவதாக குடியரசுத் தலைவர் அறிவிப்பும், அதிகாலை5.30 மணி அளவிலேயே வெளியிடப்பட்டது. இது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பாஜக, அஜித்பவார் கூட்டணி பதவி ஏற்புக்கு எதிரப்பு தெரிவித்து உச்சநீதி மன்றத்தில் அவசர வழக்கு தொடரப் பட்டு உள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அஜித்பவாருக்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏக்கள் அனைவரும் மீண்டும் சரத்பவாரிடமே திரும்பி வந்துள்ளனர்.

தொடக்கத்தில், பவார் கட்சியைச் சேர்ந்த 12 எம்.எல்.ஏக்கள் அஜித்பவாரை ஆதரிப்பதாக கூறப்பட்டது.  பின்னர், 5 எம்எல்ஏக்கள் மட்டுமே கட்சி தலைமையுடன் தொடர்பில் இல்லாமல் இருந்தனர்.  இவர்கள் டெல்லியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலை யில், அவர்களில் 3 பேரை என்சிபி தலைவர்கள் மீட்டு மும்பைக்கு அழைத்து வந்தனர். பின்னர் மேலும் 2 பேரையும், மும்பைக்கு மீட்டு வந்தனர். இவர்கள் அனைவரும் தற்போது, சரத்பவாருக்கே எங்களது ஆதரவு என்று பகிரங்கமாக அறிவித்து விட்டனர்.

இந்த நிலையில், என்சிபி கட்சியின்  54 எம்.எல்.ஏக்களில் 53 பேர் சரத்பவாரிடமே தஞ்சமடைந்து உள்ளனர். இவர்கள் தற்போது,   சரத்பவார், சிவசேனா கட்சித்தலைவர்களின் பாதுகாப்புடன்,  மும்பையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது நடைபெற்று வரும், உச்சநீதிமன்ற விசாரணையில்,  சிவசேனாவின் 56, என்சிபியின் 53, காங்கிரஸின் 44 எம்.எல்.ஏக்கள் மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 160 எம்.எல்.ஏக்கள் தங்களுக்கு ஆதரவு உள்ளது என்று, இந்த கூட்டணி சார்பில் பதவிப் பிரமாணம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், பாஜகவுக்கு ஆதரவு அளித்த  அஜித்பவார்  மட்டுமே தற்போது  தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.