குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில், சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், காங்கிரஸின் கூட்டணி கட்சியான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியைச் சேர்ந்த பல வேட்பாளர்கள், ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மேலும், காங்கிரஸ் கட்சியின் சில வேட்பாளர்களும் அங்கே கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் முடிவே இன்னும் வெளிவராத சூழலில், காங்கிரஸ் கூட்டணி நல்ல வெற்றியை பெறும் என்பதால், பெரும்பான்மைக்கு பற்றாக்குறை ஏற்பட்டால், எதிர்க்கட்சி வேட்பாளர்களை பாஜக விலைக்கு வாங்கும் என்று அஞ்சப்படுவதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த நடவடிக்கை, அரசியல் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூரிலுள்ள ஃபேர்மெளன்ட் ஹோட்டலில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் மகேஷ் ஜோஷி கூறியிருப்பதாவது, “ராஜஸ்தான் வரும் நபர்களை நாங்கள் பொறுப்பெடுத்துக் கொள்வோம். அவர்களுடைய கட்சி என்ன? மற்றும் அவர்கள் எதற்காக இங்கே வருகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது.
சுமார் 20 நபர்கள் வந்துள்ளார்கள். அவர்களுக்கான செலவுகளை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளும். பாஜக, மத்தியில் ஆளும் வரையில், சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது தொடரும்” என்றுள்ளார் அவர்.