டெல்லி: விமானங்களில் நடு இருக்கையை காலியாக வைக்க வேண்டும் என்று விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கால் ரத்து செய்யப்பட்ட உள்நாட்டு விமான சேவையானது 2 மாதம் கழித்து தொடங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை, வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் தாயகம் அழைத்து வர சர்வதேச விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், விமானங்களில் நடு இருக்கைகளை காலியாக வைக்க வேண்டும் என விமான போக்குவரத்து அமைச்சகம் கண்டிப்பாக உத்தரவை பிறப்பித்துள்ளது. அனைத்து விமான நிறுவனங்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
இது தவிர சில புதிய வழிகாட்டுதல்களையும் வெளியிடப்பட்டுள்ளன. அதாவது விமானம் புறப்படுவதற்கு குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு முன்பே பயணிகள் விமான நிலையத்தை அடைய வேண்டும். மாநில அரசாங்கங்களும், நிர்வாகங்களும் பயணிகள் மற்றும் விமானக் குழுவினருக்கு பொதுப் போக்குவரத்து மற்றும் தனியார் டாக்சிகளை உறுதி செய்ய வேண்டும்.
விமானத்திற்கான போர்டிங்கானது, புறப்படுவதற்கு 60 நிமிடங்களுக்கு முன்பே தொடங்கும். பின்னர் விமானம் புறப்படுவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பு போர்டிங் கேட் மூடப்படும். பயணத்தின் போது விமானம் சுத்தம் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.
சர்வதேச விமானங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றவில்லை என்று விமானி ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், ஜூன் 6க்கு பிறகு நடு இருக்கைகளை காலியாக வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நடு இருக்கை காலியாக வைத்திருக்க வேண்டுன் என்பதோடு, பயணிகளுக்கு எந்த உணவும் அல்லது குடிநீரும் வழங்கப்பட மாட்டாது என்பதும் குறிப்பிடத்தக்கது.