டெல்லி: இன்று பிற்பகலுக்குள் விமான சேவை முழுமையாக சீரடையும் என மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது.
மைக்ரோசாப்ட் கிளவு சர்வர் பிரச்சினை காரணமாக நாடு முழுவதும் விமான சேவைகள் உள்பட பல்வேறு தொழில்நிறுவனங்களின் பணிகள் இன்று 2வது நாளாக முடங்கின. விமான போக்குவரத்தில் சிக்கல் ஏற்பட்டால், இந்தியா உள்பட பல நாடுகளில் விமான சேவை பாதிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் விமான நிலையங்களில் விமான சேவைகளில் கடும் பாதிப்புக்குள்ளாகின. இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஆகாசா போன்ற விமான நிறுவனங்களின் சேவையில் காலை 11 மணி முதலே பாதிப்பு ஏற்பட்டது இதனால் விமான நிலையங்களில் பயணிகள் பல மணி நேரம் காத்திருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டனர். இந்தியாவில் இண்டிகோ உள்பட பல நிறுவனங்கள் 200க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்துள்ளன. பல விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதனால், பயணிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். விமான புக்கிங்கை வேறு நாளுக்கு மாற்றி தர விமான நிறுவனங்கள் முன் வந்தது. பணத்தை திருப்பி கேட்டவர்களுக்கு முழு பணமும் தரப்படும் என்று விமான நிறுவன அதிகாரிகள் வாக்குறுதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மைக்ரோசாப்ட் விண்டோஸ் கிரவுட்ஸ்ட்ரைக்கில் நிலவும் தொழில்நுட்ப பிரச்சினைகளை தீர்ப்பது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், கடந்த ஒரு நாளாக சிக்னல் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு உள்ளதாகவும், மெல்ல விமான சேவைகள் பழைய நிலைக்கு திரும்பி வருவதாகவும் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தியாவில் விமான சேவை இன்று பிற்பகலுக்குள் முழுமையாக சீரடையும். நாட்டில் அனைத்து விமான நிலையங்களிலும் தற்போது விமான சேவை சீராகி வருகிறது. மைக்ரோசாப்ட் சேவையில் ஏற்பட்ட முடக்கம் காரணமாக பின்னடைவை சந்தித்த விமான நிலையங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. இணையதள பிரச்சனைகள் சீரானதை தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் விமான சேவைகள் மீண்டும் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.