டெல்லி: விவசாய பயிர்கழிவுகளை எரிப்பதால், டெல்லியில் உயர்ந்து வரும் மாசு தொடர்பாக, அண்டை மாநில அமைச்சர்களுடன் நாளை ஆலோசனை நடைபெற இருப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் அறிவித்து உள்ளார்.
கடந்த ஆண்டு, டெல்லியில் வரலாறு காணாத அளவுக்கு காற்று மாசு ஏற்பட அண்டை மாநிலங்களான பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் மாநிலங்களில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதுதான் காரணம் என்று கூறிய உச்சநீதிமன்றம், அந்தந்த மாநில தலைமைச்செயலர்களை விசாரணைக்கு அழைத்து, பயிர்க்கழிவுகளை எரிப்பதை தவிர்த்து மாற்றுவழியை நடைமுறைப்படுத்தும் படியும், விவசாயிகளுக்கு அறிவுறுத்தும் படியும் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், தற்போது மீண்டும் அண்டை மாநிலங்களில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதால், டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதையடுத்து, டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் சுற்றுச்சூழல் அமைச்சர்களுடன் அக்டோபர் ஒன்றாம் தேதியன்று ஆலோசிக்கப்பட உள்ளதாகவும், காற்று மாசுபாடு பிரச்னை குறித்து வலியுறுத்திப் பேசிய சுற்றுச்சூழல், வனத்துறை, பருவநிலை மாற்றம் ஆகிய துறைகளுக்கான மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்து உள்ளார்.
காற்று மாசுபாட்டை அகற்றுவதற்காக கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறியவர், பதர்பூர் மின் நிலையம் மூடப்பட்டது; சோனிபட் மின் நிலையம் படிப்படியாக மூடப்பட்டது; காற்று மாசுபாடு குறைவாக உள்ள பி எஸ் VI வாகனங்கள் எரிபொருள் தரம் அறிமுகப்படுத்தப்பட்டது. டெல்லியில் சுற்றுப்புற விரைவு வழிப் பாதையை விரைந்து நிறைவேற்றியது; ஈ-வாகனங்களுக்கு மானியம் வழங்கியது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டதாக அமைச்சர் தெரிவித்தார்.