டில்லி:
நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் ஏற்பாடுகள் களைகட்டியுள்ள நிலையில், ஏர் இந்தியாவின் போர்டிங் பாஸில் பிரதமர் மோடி மற்றும் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானியின் படம் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, மோடி மற்றும் விஜய் ரூபானியின் படம் அச்சிடப்பட்ட போர்டிங் பாஸை திரும்ப பெறுவதாக ஏர் இந்தியா தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து பஞ்சாப் மாநில முன்னாள் டிஜிபி சஷிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவர் தனது பதிவில், “இன்று டில்லி விமான நிலையத்தில் என்னுடைய ஏர் இந்தியா போர்டிங் பாஸில் வைபரண்ட் குஜராத் என்ற விளம்பரத்தில், நரேந்திர மோடி, விஜய் ரூபானி ஆகியோரின் படங்கள் இடம்பெற்றிருந்தது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் ஏதும் பேசவில்லை என்று என்று தெரிவித்திருந்தார்.
நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், போர்டிங் பாசில் பிரதமர் படம் இடம் பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, போர்டிங் பாஸ்களில் புகைப்படங்களோ அல்லது மூன்றாம் தரப்பு விளம்பரங்களோ தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதகாக இருந்தால் அந்த பாஸ்கள் திரும்பப் பெறப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய ஏர் இந்தியா செய்தித்தொடர்பாளர் தனஞ்செய குமார் “துடிப்பான குஜராத் மாநாடு என்ற மாநாட்டிற்காக அச்சிடப்பட்ட போது, அதிலிருந்து மிஞ்சிய விளம்பரங்கள் தான் தற்போது போர்டிங் பாஸில் இடம்பெற்றுள்ளன. இது தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக இருந்தால் அவை திரும்பப் பெறப்படும்” என்று தெரிவித்தார்.
ஏற்கனவே கடந்த 20-ம் தேதி ரயில்வே டிக்கெட்டில் இடம்பெற்றிருந்த மோடியின் படம், திரிணாமூல் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் வழங்கிய புகாருக்கு பின் திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.