டெல்லி:

ஏர்இந்தியா மேலாளரை செருப்பால் அடித்த சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட்டிற்கு ‘இந்தியன் ஏர்லைன்ஸ் கூட்டமைப்பு’ தடை விதித்தது.

அதோடு வர்த்தக விமான பைலட்கள் சங்கமும் ரவீந்திர கெய்க்வாட் மன்னிப்பு கோரும் வரை அவர் பயணிக்கும் விமானங்களை இயக்க மாட்டோம் என்று மத்திய விமான போக்குவரத்து துறைக்கு கடந்த 24ம் தேதி கடிதம் எழுதியிருந்தது.

இதனால் ஏர் இந்தியா உள்பட 7 தனியார் விமானங்களிலும் அவர் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இப்பிரச்சனையை முன்வைத்து நாடாளுமன்றத்தில் சிவசேனா எம்.பிக்கள் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர்.

பின்னர் சிவசேனா எம்.பி.க்கள் பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜனை நேற்று அவரது அறையில் சந்தித்து பேசினர். அப்போது, இதுபோன்ற ஒரு சம்பவம் இனி எதிர்காலத்தில் நடக்காது என ரவீந்திர கெயிக்வாட் உறுதி அளித்தால், அவருக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க உதவும் வகையில் இந்த பிரச்சினையில் அரசு தலையிட முடியும் என்று அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவன மேலாளரை அடித்ததற்கு வருத்தம் தெரிவித்து சிவில் விமான போக்குவரத்து துறை மந்திரி அசோக் கஜபதி ராஜூவுக்கு சிவசேனா எம்.பி. ரவீந்திர கெயிக்வாட் கடிதம் எழுதினார்.

அதில், ‘‘கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி ஏர் இந்தியா விமானத்தில் நடந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டமானது என்றும், அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படுவதை யாரும் விரும்புவதில்லை. தற்போது நடைபெற்று வரும் விசாரணையில் நடந்த சம்பவத்துக்கான காரணம் தெரியவரும்’’ என்றும் கடிதத்தில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இதையடுத்து, சிவசேனா எம்.பிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு விமான போக்குவரத்து துறை அமைச்சகம் கடிதம் எழுதியது. இந்த கடிதத்தை ஏற்றுக்கொண்ட ஏர் இந்தியா நிறுவனம் சிவசேனா எம்.பி கெய்க்வாட் விமானத்தில் பறக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.