மும்பை:
பொதுவாக கடைசி நேரத்தில் பதிவு செய்யும் பயணிகளின் கட்டணம் அதிகமாக இருப்பது வழக்கம். ஆனால், ஏர் இந்தியா நிறுவனம் அந்த முறையை மாற்றி, கடைசி நேரத்தில் விமான முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு கட்டண சலுகை வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்து உள்ளது.
இந்திய உள்நாட்டு விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா விமானப் போக்குவரத்து சந்தையில் அதிக போட்டியினை எதிர்கொள்ள ஏர் இந்தியா விமானம் பல வகையான ஆஃபர்களை வழங்கி வருகிறது.
இந்த நிலையில், விமானம் புறப்படுவதற்கு கடைசி 3 மணி நேரத்தில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு விமான பயண கட்டணங்களில் சலுகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ‘ஒரு நிமிட முன்பதிவு’ என்ற இந்த சலுகை யில் 40 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற வர்த்தக மறு ஆய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, கடைசி நிமிடத்தில் விமான முன்பதிவு செய்பவர்களின் பயண கட்டணம் 40% வரை அதிகமாக வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது 40 சதவிகிதம் வரை சலுகை தர முன்வந்திருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதன் காரணமாக ஏர் இந்தியா விமான பயணிகளின் எண்ணிக்கை 40 சதவிகிதம் வரை உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக அவசர பயணங்களுக்கு கடைசி நேரத்தில் பயணம் செய்பவர்கள், மிக குறைந்த கட்டணத்தில் டிக்கெட் புக் செய்யலாம் என்று ஏர்இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிக்கெட்களை ஏர் இந்தியா கவுண்டர்கள், இணையதளம், மொபைல் ஆப் அல்லது முகவர்கள் மூலம் பதிவு செய்யலாம் என்றும் அறிவித்து உள்ளது.