ஜெய்பூர்: குணால் கம்ரா என்ற பெயர் வைத்திருந்ததால் போஸ்டனுக்கு செல்லும் பயணி ஒருவருக்கு ஜெய்பூர் விமான நிலையத்தில் அனுமதி மறுக்கப்பட்டது.
பிரபல நகைக்சுவை நடிகரான குணால் கம்ரா சில நாட்களுக்கு முன்னதாக மும்பையில் இருந்து லக்கோவிற்கு இண்டிகோ விமானத்தில் பயணம் செய்தார். அப்போது அவருடன் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் ஆசிரியரும், வலதுசாரி ஆதரவாளருமான அர்னாப் கோஸ்வாமியும் பயணித்துள்ளார்.
இதுகுறித்த வீடியோ ஒன்றை ட்விட்டரில் குணால் கம்ரா வெளியிட்டார். அதில், அர்னாப் கோஸ்வாமியிடம் குணால் பல கேள்விகளை கேட்டுள்ளார். அர்னாப் பதிலளிக்காமல் கண்டுகொள்ளாதது போல் இருக்க நீங்கள் கோழையா? இல்லை தேசியவாதியா? எனவும் பலவாறு குணால் கேள்வி எழுப்புகிறார்.
அந்த வீடியோ ட்விட்டரில் வைரலான நிலையில் இண்டிகோ நிறுவனம் குணால் கம்ராவிற்கு 6 மாதங்களுக்கு தங்களின் விமான சேவையில் பறக்க தடை விதித்தது. இண்டிகோவை போன்று, ஏர் இந்தியா, கோ ஏர் மற்றும் ஸ்பைஸ் ஜெட் உள்ளிட்ட நிறுவனங்களும் 6 மாதங்கள் வரை குணால் கம்ரா தங்களது விமானங்களில் பறப்பதற்கு தடை விதித்துள்ளது.
இந் நிலையில் ஜெய்பூர் விமான நிலையத்துக்கு குணால் கம்ரா என்ற பெயர் கொண்ட பயணி ஒருவர் போஸ்டன் செல்வதற்காக வந்திருக்கிறார். போஸ்டனில் வசிப்பவர். இந்தியாவில் தனது குடும்பத்தினரை சந்தித்து வந்தார்.
மீண்டும் ஊர் திரும்ப அவர் ஜெய்பூர் விமான நிலையம் வந்தார். அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவரது டிக்கெட்டும் ரத்து செய்யப்பட்டது.
நீண்ட நேர போராட்டம் மற்றும் விளக்கங்களுக்கு பிறகு அவர் விமானத்தில் பறக்க அனுமதி தரப்பட்டது. இது குறித்து அவர் கூறி இருப்பதாவது:
எனது பி.என்.ஆர் ரத்துசெய்யப்பட்டதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது, ஏன் என்று நான் அவர்களிடம் கேட்டபோது, எனது பெயர் தடுப்புப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சொன்னார்கள்.
ஏன் என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தது, ஆனால் குறிப்பாக நான் ஏன் தடுப்புப்பட்டியலில் வைக்கப்பட்டேன் என்று எனக்கு புரியவில்லை.
ஏர் இந்தியா மக்கள் மிகவும் உதவியாக இருந்தனர், போதிய நேரமும் இருந்தது. எனவே அவர்களால் எனக்கு இன்னொரு டிக்கெட்டை வழங்க முடிந்தது, அந்த குணால் கம்ரா என்று நான் நிரூபிக்க வேண்டி இருந்தது.
எனது டிக்கெட் ரத்துசெய்யப்பட்டதாக எனது விமானத்திற்கு முன்பு எனக்கு அறிவிக்கப்படவில்லை. எனது டிக்கெட் ஏன் ரத்து செய்யப்பட்டது என்பது குறித்து எனக்கு ஒருபோதும் சரியான விளக்கம் கிடைக்கவில்லை.
அடிப்படையில், அவர்கள் எனது டிக்கெட்டை ரத்து செய்ததற்கு ஒரே காரணம், எனது பெயர் தான் காரணம் என்று கூறினார்.