242 பேருடன் அகமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா AI 171 விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கியது.

விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து, துக்கத்தை தெரிவிக்கும் வகையில்  ஏர் இந்தியாவின் சமூக ஊடக கணக்குகள் கருப்பாக மாற்றப்பட்டுள்ளது. இந்த துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, சமூக ஊடக தளமான X இல் ஏர் இந்தியா தனது சுயவிவரப் படத்தை கருப்பு நிறமாக மாற்றி உள்ளது.

இன்று மதியம் 1:39 மணிக்கு புறப்பட்ட  ஏர்இந்தியா  விமானம் விமான நிலையத்தின் 23வது ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

அங்கிருந்து சுமார் 15 கி.மீ. தூரம் பறந்த நிலையில் விமானத்தில் இருந்து ‘May Day’ எமர்ஜென்சி விடுக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதும் விமானம் மெகனி நகர் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த அடுத்த வினாடி தீப்பிடித்து எரிந்ததில் விமானம் மொத்தமும் எரிந்து சாம்பலானது.

இதில் 230 பயணிகள் மற்றும் 10 விமான ஊழியர்கள் தவிர 2 விமானிகள் இருந்ததாகவும் அதில், 169 பேர் இந்தியர்கள் என்றும் 53 பேர் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

மேலும், 7 போர்ச்சுகீசியர்கள் மற்றும் ஒரு கனேடியர் என மொத்தம் 230 பயணிகள் அந்த விமானத்தில் இருந்த நிலையில் அவர்களின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.

இந்த விமானத்தில் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பயணம் செய்ததாகக் கூறப்படும் தகவலை விமான நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.