மாட்ரிட்
ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட் நகரில் ஏர் கனடா விமானம் டயர் வெடித்ததால் அவசரமாகத் தரை இறக்கப்பட்டது.
ஏர் கனடா போயிங் 767 ரக விமானம் நேற்று ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரின் பராஜாஸ் விமான நிலையத்தில் இருந்து கிளம்பியது. மொத்தம் 128 பயணிகளுடன் சென்ற இந்த விமானம் கனடாவின் டொரோண்டோ நகரை நோக்கிச் சென்றுள்ளது.
அந்த விமானம் பறக்கத் தொடங்கியதும் விமானத்தின் டயர்களில் ஒன்று வெடித்துள்ளது. அத்துடன் விமான எஞ்சினிலும் கோளாறு ஏற்பட்டுள்ளது. அதையொட்டி அந்த விமானம் உடனடியாக மாட்ரிட் நகர விமான நிலையத்துக்கு திரும்பியது.
விமானத்தைப் பத்திரமாக இறக்க அதன் எடையைக் குறைக்க வேண்டி இருந்தது அதையொட்டி விமானம் சுமார் ஒரு மணி நேரம் விண்ணில் வட்டமிட்டு எரிபொருளைக் காலி செய்தது. அதன் பிறகு விமானம் பத்திரமாக தரை இறங்கி உள்ளது.