மலேசியாவில் இருந்து அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயருக்கு நேரடி விமான சேவையை ஏர் ஏசியா நிறுவனம் விரைவில் தொடங்குகிறது.

போர்ட் பிளேயரில் இருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு ஏர் இந்தியா, ஆகாசா ஏர், இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் மற்றும் விஸ்தாரா ஆகிய விமான நிறுவனங்கள் விமான சேவை வழங்கி வருகிறது.

முதல் முறையாக போர்ட் பிளேயரில் இருந்து சர்வதேச விமான சேவையை குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கி வரும் ஏர் ஏசியா நிறுவனம் துவங்க உள்ளது.

கிழக்காசிய நாடுகளில் இருந்து போர்ட் பிளேயருக்கான இந்த முதல் நேரடி விமான சேவை மூலம் மேலும் பல ஆசிய நாடுகள் விமான சேவையை துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இந்தியாவின் அந்தமான் தீவுகளில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏர் ஏசியா நிறுவனம் 2024 நவம்பர் 16ம் தேதி முதல் தனது புதிய சேவையை துவங்க உள்ளதாகவும் வாரத்திற்கு 3 விமான சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே சென்னை, திருச்சிராப்பள்ளி, புது டில்லி, அமிர்தசரஸ், புவனேஸ்வர், ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவையை வழங்கி வரும் ஏர் ஏசியா நிறுவனத்தின் 17வது இந்திய நகரமாக போர்ட் பிளேயர் அமையவிருப்பது குறிப்பிடத்தக்கது.