டெல்லி:
2022-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை ரூ.350 லட்சம் கோடியாக உயா்த்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக, தலைமை கணக்காயர்கள் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி கூறினார்.
மேலும், வருகிற 2022 ஆம் ஆண்டுக்குள் ஆதார அடிப்படையிலான கொள்கையை வடிவமைப்பதை நிர்வாகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றுவதும் அரசின் இலக்கு என்று கூறியுள்ளார். தலைநகர் டெல்லியில் உள்ள இந்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி (CAG Comptroller and Auditor General ) அலுவலகத்தில் கணக்காயர்கள் மாநாடு நடைபெற்றது.
முன்னதாக, CAG அலுவலகத்தில் மகாத்மா காந்தியின் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து மாநாடு தொடங்கியது. மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, தொழில் சார்ந்த முறைகேடுகளைத் தடுப்பதற்கு புதுமையான வழிமுறைகளை தலைமை கணக்குத் தணிக்கை அலுவலகம் கண்டறிய வேண்டும். அரசுத் துறைகளில் ஊழல்களை வேரறுப்பதற்கு புதுமையான முறைகளை கணக்குத் தணிக்கை அலுவலகம் உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அரசு நிர்வாகத்தை மேம்படுத்துவதில் கணக்குத் தணிக்கையாளா்கள் சிறந்த பங்களிப்பு செலுத்த முடியும் என தெரிவித்தவர், மிக துல்லியமான கணக்கு தணிக்கையை அனைவரும் விரும்பும் நிலையில், தணிக்கையாளர்கள், தங்கள் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
தொடர்ந்து பேசியவர்… வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை ரூ.350 லட்சம் கோடியாக உயா்த்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த இலக்கை எட்டுவதற்கு கணக்குத் தணிக்கைத் துறை முக்கியப் பங்காற்ற வேண்டும் என்றும், ஆதார அடிப்படையிலான கொள்கையை வடிவமைப்பது நாட்டிற்கு புதிய அடையாளத்தை தரும் என்றும், நாட்டின் பொருளாதாரம், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டிப்பிடிக்க கணக்கு தணிக்கையாளர்களின் பங்களிப்பு அவசியம்.
இவ்வாறு மோடி பேசினார்.