ஹைதராபாத்: ஏதாவது புதியதாக 50:50 பிஸ்கெட் வந்திருக்கிறதா என்று பாஜக, சிவசேனா கூட்டணி அதிகார பகிர்வு பற்றி மஜ்லிஸ் கட்சி தலைவரும், எம்பியுமான ஓவெய்சி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அப்படி, இப்படி என்று நாட்கள் நகர்கிறதே தவிர, மகாராஷ்டிராவில் யாருக்கு முதலமைச்சர் பதவி என்பதில் தீர்வு வந்தபாடில்லை. பாஜக, சிவசேனா கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடித்தாலும், யார் முதலமைச்சர் என்பதில் இரு கட்சிகளுக்கும் பிரச்னை நீடித்து வருகிறது.
தேர்தலுக்கு முன்பு 50:50 என்ற திட்டம் வகுக்கப்பட்டு விட்டது. எனவே ஆட்சியில் சம் பங்கு என்ற அடிப்படையில், முதல் இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவியில் அமர போவதாக சிவசேனா அறிவித்திருக்கிறார். ஆனால், சிவசேனாவின் கோரிக்கையை பாஜக பொருட்படுத்தவில்லை என்பது போல தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதே நேரத்தில், காங்கிஸ், தேசியவாத கூட்டணி ஆதரவை பெற்று, முதலமைச்சர் பதவியில் சிவசேனா அமர தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந் நிலையில், மகாராஷ்டிரா அரசியலில், 50:50 என்றால் என்ன மஜ்லிஸ் கட்சி தலைவரும், எம்பியுமான அசாதுதீன் ஓவெய்சி கிண்டலடித்து உள்ளார். ஹைதராபாதில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் இவ்வாறு கூறி இருக்கிறார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது: அது என்ன 50:50? புதிய வகை பிஸ்கெட்டா? 50:50 என்ன செய்யும்? மகாராஷ்டிரா மக்களுக்கு ஏதாவது செய்ய பாருங்கள்.
சத்தாராவில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பை பற்றி அவர்களுக்கு (பாஜக, சிவசேனா) அக்கறையில்லை. விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அதை விட்டுவிட்டு, 50:50 பற்றி பேசி வருகின்றனர்.
தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சர் ஆவரா? இல்லையா? என்று எனக்கு தெரியாது. இசை நாற்காலி போட்டி போன்று அங்கு காட்சிகள் நடக்கிறது. என்ன செய்வது என்று தெரியாமல் சிவசேனா இருப்பதாக கருதுகிறேன். மோடியை பார்த்து உத்தவ் தாக்கரே பயந்துவிட்டார் என்பது போல தெரிகிறது என்றார்.